மாயமான தங்க செயினை கண்டுபிடித்து கொடுக்காததால் ஆத்திரம் துணை கமிஷனர் அலுவலகத்தில் போலீஸ்காரர் மனைவி தீக்குளிக்க முயற்சி

ஆவடி, டிச.11: ஆவடி, மத்திய பாதுகாப்பு படை குடியிருப்பில் 2 போலீஸ்காரர்களின் மனைவிகளுக்கு ஏற்பட்ட தகராறில் தங்க செயின் மாயமானது. இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்காததால் போலீஸ்காரர் மனைவி, துணை கமிஷனர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆவடி, மத்திய பாதுகாப்பு படை குடியிருப்பைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. மத்திய பாதுகாப்பு படையில் போலீஸ்காரராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி கவுரி(39). இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் சதாசிவம். இவரும் மத்திய பாதுகாப்பு படையில் போலீஸ்காரராக உள்ளார். இவரது மனைவி வித்யா (28). கவுரி, வித்யா ஆகியோருக்கு இடையே அடிக்கடி  தகராறு நடந்துள்ளது. இதுபோல், கடந்த செப்டம்பர் மாதம் 17ம் தேதி, அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டு, கைகலப்பில் முடிந்தது. இதில், அண்ணாதுரையும், சதாசிவமும் மோதி கொண்டனர்.  அப்போது, கவுரியின் கழுத்தில் இருந்த 5 சவரன் செயின் மாயமானது.

இதில் காயமடைந்த கவுரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு, 3நாட்கள் கழித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசில் புகார் அளித்தார்.  போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்தனர். அதன்பிறகு இரு தரப்பினர் மீதும் சண்டை, சச்சரவு வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் கவுரி, நேற்று மாலை ஆவடி துணை கமிஷனர் அலுவலகம் சென்றார். அங்கு மாயமான தனது செயினை ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் கண்டுபிடித்து தரவில்லை என கூறி, மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை, உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்வதாக மிரட்டல் விடுத்தார். இதை பார்த்ததும், அங்கிருந்த போலீசார், உடனடியாக அவரை மீட்டு, அவரிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறித்தனர். பின்னர் அவரை, ஆவடி உதவி கமிஷனர் ஜெயராமன், இன்ஸ்பெக்டர் ஜெய்கிருஷ்ணன் ஆகியோர் ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ்  நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு, கவுரி மற்றும் வித்யா ஆகியோர் குடும்பதினருடன்  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாயமான தங்க செயினை கண்டு பிடித்து தராததால்,  துணை கமிஷனர் அலுவலகத்தில் போலீஸ்காரர் மனைவி தீக்குளிக்க முயன்ற சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: