சொத்து தகராறில் வெடிகுண்டு மிரட்டல் : கூலி தொழிலாளி கைது

ஆவடி, டிச.11: ஆவடியில் குடும்பத்தினருக்கு இடையே ஏற்பட்ட சொத்து தகராறில் வீட்டில் வெடிகுண்டு வைத்து வெடிக்க செய்வதாக மிரட்டல் விடுத்த கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை தொலைபேசிஅழைப்பு வந்தது. அதில், பேசிய மர்மநபர், எனது வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளேன். சிறிது நேரத்தில் வெடிக்கும் என கூறியுள்ளார். மேலும், சம்பவ இடத்துக்கு கமிஷனர் நேரில் வரவேண்டும் என கூறிவிட்டு, இணைப்பை துண்டித்தார். இதையடுத்து போலீசார், அழைப்பு வந்த எண்ணை ஆய்வு செய்தனர். அதில், ஆவடி அடுத்த காமராஜர் நகர், பழைய ஜீவானந்தம் தெருவில் இருந்து பேசியது தெரிந்தது. ஆவடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். எஸ்ஐ பிரபாகரன் வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்றார். மோப்ப நாய் ரோஜாவும் வரவழைக்கப்பட்டு, அந்த வீட்டை சோதனை நடத்தினர்.

அப்போது, அந்த வீட்டில் கொட்டாங்குச்சியில் நாட்டு வெடிகுண்டு தயாரித்து இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து, அதனை வெடிகுண்டு நிபுணர்கள் பறிமுதல் செய்து, அங்கேயே செயல் இழக்க செய்தனர்.  தொடர்ந்து போலீசார் விசாரித்தனர். அதில், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து பேசியவர் சுப்பாராவ் (45). கூலி தொழிலாளி என தெரிந்தது. மேலும், விசாரணையில், சுப்பாராவுக்கு திருமணம் ஆகவில்லை. சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். மேற்கண்ட முகவரியில் பாழடைந்த வீட்டில் தனியாக வசிக்கிறார். அவருக்கும், இவரது அண்ணன், தங்கை ஆகியோர் இடையே சொத்து தகராறு இருந்துள்ளது. இதற்காக, அவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பாராவை  கைது செய்தனர். பின்னர் அவரை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: