கல்வி உதவித்தொகை வழங்காததை கண்டித்து அரசு கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்

பொன்னேரி, டிச.11: கல்வி உதவித்தொகை, இலவச பஸ் பாஸ் வழங்காததை கண்டித்து  பொன்னேரி அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து திடீர்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பொன்னேரியில் உள்ள உலகநாத நாராயணசாமி அரசினர் கலைக் கல்லூரியில் சுமார் 4000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று வழக்கம் போல் கல்லூரிக்கு வந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து நுழைவாயிலில் திரண்டனர். இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும், கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கோஷமிட்டனர். மேலும், கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராகவும், இலவச பஸ்பாஸ் வழங்குவதில் காலதாமதம் செய்யும் தமிழக அரசை கண்டித்தும் முழக்க மிட்டனர். இதைத்தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் சார்பில், ஒரு வாரத்தில் கோரிக்கைகள் நிறைவேற்ற துரித நடவடிக்கை எடுக்கப்படும் என மாணவர்களிடம் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்று போராட்டத்தை கைவிட்டு அனைத்து மாணவர்களும் கலைந்து சென்றனர்.

Related Stories: