குமரி மாவட்டத்தில் வேளாண்மை கல்லூரி அமைக்கப்படுமா? விவசாயிகளின் நீண்டநாள் கனவு திட்டம்

நாகர்கோவில், நவ. 11:   குமரி மாவட்டத்தில் முக்கிய தொழில்களில் ஒன்று விவசாயம். மாவட்டத்தில் உள்ள அணைகள் மற்றும் மழையை நம்பி விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். மாவட்டத்தில் சுமார் 6500 ஹெக்டர் பரப்பளவில் நெல்சாகுபடி நடந்து வருகிறது. மாவட்டத்தில் ரப்பர், தென்னை, வாழை மற்றும் பணப்பயிர்கள் என தோட்டக்கலை பயிர்கள் சுமார் 65 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் வேறு முக்கிய தொழிற்சாலைகள் இல்லை. விவசாயத்தை செய்யும் பலர் தங்கள் தலைமுறைக்கு பிறகு விவசாயம் தேவையில்லை என கருதி அவர்களது குழந்தைகளை வேறு படிப்புகளுக்கு அனுப்புகின்றனர். இதனால் குமரி மாவட்டத்தில் விளைநிலங்களின் பரப்பளவு வருடந்தோறும் குறைந்து வருகிறது. விளைநிலங்கள் சுருங்குவதை தடுக்கவும், வரும் தலைமுறைகள் விவசாயத்தை பயன்படுத்தி அதிக லாபம் பெறவும் தமிழக அரசு முழுமுயற்சி மேற்கொள்ள வேண்டும். குமரி மாவட்டத்தில் விவசாயத்தை மையப்படுத்தி அரசு வேளாண்மை கல்லூரி அமைக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 இதுபோல் மக்கள் பிரதிநிதிகளும் தொடர்ந்து சட்டசபைகளிலும் குரல்கொடுத்து வருகின்றனர். ஆனால் தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது. தமிழகத்தில் கோவை அரசு வேளாண்மை பல்கலைகழகத்தின் கீழ் கோவை, மதுரை, கிள்ளிகுளம், வல்லநாடு, திருச்சியில் 3, தஞ்சை, புதுக்கோட்டை, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் அரசு வேளாண்மை கல்லூரி உள்ளது.  இதுபோல் தமிழகத்தில் 30 தனியார் வேளாண்மை கல்லூரிகள் உள்ளன. குமரி மாவட்டத்தில் வேளாண்மை கல்லூரி அமைக்க ஏற்ற இடமாக உள்ளது. இருந்தாலும் தோவாளை மலர் ஆராய்ச்சியகம், திருப்பதிசாரம் நெல் ஆராய்ச்சியகம், பேச்சிப்பாறை தோட்டக்கலை ஆராய்ச்சியகம் இருக்கிறது என காரணம் காட்டி தமிழக அரசு புறக்கணித்து வருகிறது. இது குறித்து வேளாண்மை அதிகாரி ஒருவர் கூறியதாவது: வேளாண்மை கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு துறையில் நல்ல எதிர்காலம் உள்ளது. இதனை அதிக அளவு மாணவர்கள் பயன்படுத்திக்கொள்வது இல்லை. தற்போது வேளாண்மை துறையில் 841 காலி பணியிடங்களுக்கு ஆட்களை நிரப்ப அரசு அறிவிப்பு விடுத்துள்ளது.

 ஆனால் விண்ணப்பிக்க போதிய அளவு ஆட்கள் இல்லை. அரசு வேளாண்மை கல்லூரிகள் தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களை சுற்றியே அமைந்துள்ளது. குமரி மாவட்டத்தில் வேளாண்மை கல்லூரிகள் அமைந்தால், வெளிநாட்டில் உள்ள விஞ்ஞானிகள் அதிக அளவு வரவாய்ப்பு உள்ளது. மேலும் பல மாணவர்கள் படித்து பல்வேறு அரசு துறைகளில் பணிக்கு செல்ல வாய்ப்பாக இருக்கும். அரசு வேளாண்மை கல்லூரி அமைக்க குமரி மாவட்டத்தில் போதிய நிலம் இல்லை என கூறி வருகின்றனர். கல்லூரி அமைக்க 110 ஏக்கர் நிலம் தேவை. இந்த நிலங்களை மாவட்டத்தில் மையப்பகுதியில் அமைத்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கல்லூரி அமையும் போது நேரடியாக 500 பேர் வேலைவாய்ப்பு பெறுவர். இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி பிரிவுகளில் பல மாவட்டங்களில் இருந்து மாணவ, மாணவிகள் வந்து படித்து பயன்பெறுவார்கள். இதனால் குமரி மாவட்டம் மேலும் வளர்ச்சி பெறும்.

அறநிலையத்துறை ஒத்துழைப்பு தேவை

 விவசாயி செண்பகசேகரபிள்ளை கூறியதாவது: விவசாயிகள் தொடர்ந்து வேளாண்மை கல்லூரி அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறோம். சுரேஷ்ராஜன் எம்எல்ஏ சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தபோது, இடம் இல்லை என பதில் கூறப்பட்டது. பிற மாவட்டங்கள் போல் இல்லாமல் இந்த மாவட்டம் பாலை நிலங்களை தவிர்த்து அனைத்து நில அமைப்புகளையும் கொண்டுள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை உள்ளடக்கி இந்த மாவட்டம் உள்ளது. இங்கு வேளாண்மை கல்லூரி வரும் பட்சத்தில் அதிக மாணவ, மாணவிகள் பயன்பெறுவதோடு, அதிக புதிய விளைபொருட்களை ஆராய்ச்சி செய்வதற்கு உகந்த இடமாக இருக்கும். வேளாண்மை கல்லூரியை அரசு நிலம் அல்லது அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலத்திலோ அமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: