திருவாரூர் மாவட்டத்தில் மீண்டும் கணக்கெடுப்பில் குளறுபடி நிவாரணமின்றி மக்கள் திண்டாட்டம் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்ட எச்சரிக்கை

திருவாரூர், டிச.7: திருவாரூர் மாவட்டத்தில் மீண்டும் கணக்கெடுப்பு பணி என்று ஐஏஎஸ் அலுவலர்களின் குளறுபடி காரணமாக நிவாரணம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டவர்கள் திண்டாடி வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி வெளி

யிட்டுள்ள அறிக்கை: கஜா புயல் காரணமாக திருவாரூர் மாவட்டம் மிகப்பெரிய பாதிப்பினை சந்தித்துள்ளது. பாதிப்புகள் குறித்து வருவாய்த் துறையினர் கணக்கெடுப்பு நடத்தி உள்ள நிலையில் டிசம்பர்  3ம் தேதி முதல் பாதிக்கப்பட்டவர்களுக்கான அவர்களது வங்கி கணக்கில் நிவாரண தொகை  வரவு வைக்கப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் பத்திரிக்கை  வாயிலாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கணக்கெடுப்பில் குளறுபடி உள்ளதால் மீண்டும் கள ஆய்வு செய்ய உள்ளதாக மாவட்டத்திற்கென நியமிக்கப்பட்டுள்ள பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். புயல் தாக்கி தற்போது 20 தினங்கள் கடந்து விட்ட நிலையில் தற்போது மீண்டும் புதிதாக கணக்கெடுப்பு நடத்த உள்ளதாக தெரிவிப்பது எவ்விதத்தில் நியாயம். முகாம்களில் தங்க முடியாமல் கந்து வட்டிக்கு பணத்தை பெற்று பொதுமக்கள் தங்களது வீடுகளை கொஞ்சம் சீரமைத்து தற்போது அதில் குடியேறி வருகின்றனர். இந்நிலையில் தற்போது புதிய கணக்கெடுப்பு பணி என்று கூறி வீடுகளுக்கு சேதம் ஏற்படவில்லை என்பதை காரணம் காட்டி நிவாரண பயனாளிகளை குறைக்கும் வகையில் இதுபோன்று அவர்களின் செயல்பாடு உள்ளது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவிப்பதுடன் ஏற்கனவே எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி பயனாளிகளுக்கு உரிய நிவாரண தொகையை உடனே அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும். இதற்கு மாறாக அலுவலர்கள் செயல்படும் பட்சத்தில் கட்சியின் சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கிறோம். இவ்வாறு சுந்தரமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Related Stories: