கஜா புயலால் பேரழிவை சந்தித்த நாகை, திருவாரூரை பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவிக்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்

மன்னார்குடி, டிச. 7: கஜா புயலால் பேரழிவை சந்தித்துள்ள  திருவாரூர், நாகை மாவட்டங்களை  தேசிய பேரிடர்  பாதிப்பு மாவட்டமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து  திமுக முன்னாள் எம்பி ஏகேஎஸ் விஜயன், இந்திய கம்யூனிஸ்ட் கோட்டூர் ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் ஜெயராமன், தமிழ்நாடு  விவசாய சங்க ஒன்றிய தலைவர் பாலை பரந்தாமன்  ஆகியோர்

விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கஜா புயல் மற்றும் மழையால் திருவாரூர்,  நாகை மாவட்டம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு மக்களின் வாழ்க்கை முடங்கியது. இம்மாவட்டத்தில் வாழும் மக்கள் அதிகளவில் விவசாயத்தை நம்பி வாழும் விவசாயிகளும் விவசாய தொழிலாளர்களும் அதிகளவில் வசிக்கின்றனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் கூரை மற்றும் ஓட்டு வீடுகளில் வசித்து வருகிறார்கள். இந்த வீடுகள் அனைத்தையும் கஜா புயலும் தொடர்ந்து பெய்த மழையும் சேதம் அடைய வைத்து விட்டது. அதோடு தென்னை மரங்கள், தேக்கு மரங்கள், மாமரங்கள் உள்ளிட்ட பலன் தரும் மரங்கள் வேரோடு முறிந்து விட்டது. இதனால் விவசாய தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிர்கதியாய் நிற்கின்றனர்.

மேலும் கடந்த 6,  7 ஆண்டுகளாக காவிரி பொய்த்து  வறட்சியால் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் கடன் சுமையில்  விவசாயிகள் விரக்தியுடன்   வாழ்ந்து வருகின்றனர்.  இந்த ஆண்டு அணையில் போதுமான தண்ணீர்  இருந்ததால் சாகுபடி இந்த ஆண்டு நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயத்தை தொடங்கினர். இந்நிலையில் கர்நாடக கேரள மாநிலங்களில் பெய்த கடும் மழையால் மேட்டூர் அணைக்கு அதிக அளவில் தண்ணீர்  வந்தது. இதனால் முக்கொம்பில் ஏற்பட்ட உடைப்பால் சுமார்  40 நாட்கள் சம்பா சாகுபடி பணிகள் தண்ணீர்  இல்லாமல் பாதிக்கப்பட்டது. இதனால் வயல்களை மறு உழவு செய்து சாகுபடியை தேக்கி வளர்ந்து வந்த சம்பா பயிர்கள் கஜா புயல் மற்றும் மழையால் பெருமளவில் பாதிக்கப்பட்டது.

அதிலும் திருவாரூர் மாவட்டத்தில் கோட்டூர், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி  போன்ற ஒன்றியங்களை சேர்ந்த மக்கள் கஜா புயல் மற்றும் மழையால் அதிக அளவில் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.இப்படி பாதிக்கப்பட்ட மக்களையும்  பகுதிகளையும் பார்வையிட வந்த மத்திய குழுவும், தமிழக முதல்வரும் திருவாரூர் மாவட்டத்தில் அதிகம் பாதித்த கோட்டூர்,  முத்துப்பேட்டை, மன்னார்குடி ஒன்றியங்களை கண்டு கொள்ளவில்லை. இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டு சுமார் 20 நாட்கள் கடந்த நிலையிலும் பிரதமர்  தமிழ் நாட்டுக்கு வந்து பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களை பார்வையிடாதது வேதனையளிக்கிறது. எனவே பிரதமர் உடனே பார்வையிட்டு திருவாரூர், நாகை மாவட்டத்தை மத்திய அரசு தேசிய பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவித்து போர்கால அடிப் படையில் நடவடிக்கை எடுத்து விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து விவசாய க் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள சம்பா பயிர்களுக்கு ஏக்கருக்கு 25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். அனைத்து வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆதலால் அனைத்து குடும்ப கார்டுகளுக்கும் தலா ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். முற்றிலுமாக இடிந்த வீடுகளை கணக்கெடுத்து மத்திய மாநில அரசுகள் கான்கிரீட்  வீடுகள் கட்டிதர வேண்டும். தென்னை, மா, பலா போன்ற மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இறந்த கால்நடைகளுக்கும் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இவைகளை போர்கால அடிப்படையில் சீரமைத்து மக்களின் இயல்பு வாழ்க்கை விரைவாக திரும்ப மேலும் துரிதமாக பணிகளை முடித்துவிட வேண்டும் என தெரிவித்தனர்.

Related Stories: