20 நாட்களுக்கு பிறகு மின் வெளிச்சத்தை கண்ட பெருகவாழ்ந்தான் வர்த்தகர்கள் மகிழ்ச்சி

மன்னார்குடி, டிச. 7: கஜா புயலின் காரணமாக துண்டிக்கப்பட்ட மின்சாரம் 20  நாட்களுக்கு பிறகு சீரமைக்கப்பட்டு  பெருகவாழ்ந்தான் கடைவீதிக்கு மின் இணைப்பு கொடுக்கப் பட்டதால் வர்த்தகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த 15ம் தேதி நள்ளிரவு கஜா புயலின் கோரத்தாக்குதலால் கோட்டூர் ஒன்றியப் பகுதிகள் முழுவதையும் புரட்டிப்போட்டது. இதனால் ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்தது. ஏராளமான டிரான்ஸ்பார்மர்கள் சேதம் அடைந்தன. இதனால் மின்தடை ஏற்பட்டது. மின்சாரம் இல்லாமல் குடிநீர்  உட்பட மக்களின் 80 சதவீத அத்தியாவசிய தேவைகள் முற்றிலுமாக முடங்கியது. இதனால் அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து மின்துறை அதிகாரிகள் வெளிமாவட்டத்தில் இருந்து வந்த மின்வாரிய ஊழியர்களுடன் இணைந்து  போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டனர்.

இதனால் கோட்டூர் ஒன்றியம் பெருகவாழ்ந்தான் மெயின்ரோடு கடைத் தெருவுக்கு நேற்று மின்விநியோகம் கிடைத்தது. இதனால் வர்த்தகர்கள் உட்பட அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். தொடர்ந்து இப்பகுதியிலுள்ள தெருக்கள் முழுவதும் ஓரிருதினங்களில் மின்வினியோகம் கிடைத்து விடும் என்று மின்வாரிய பொறியாளர்  பிரபு, லைன்மேன் சந்திரமோகன் ஆகியோர்  தெரிவித்தனர்.  இதேபோல் கோட்டூர், திருமக்கோட்டை பகுதிகளிலும் கடைத்தெருவில் மின்வினியோகம் வழங்கப்பட்டுள்ளது. இன்னும்  இவ்வொன்றியத்தில் 40க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்வினியோகம் கொடுக்கப்படவில்லை. இதற்கான பணிகள் மிக விரைவாக  நடைபெற்று வருகிறது.

Related Stories: