மாநிலம் முழுவதும் வனவர் ஆன்லைன் தேர்வு 18 ஆயிரம் பேர் எழுதினர் 10,579 பேர் ஆப்சென்ட்

சேலம், டிச.7: வனவர் பணிக்கான ஆன்லைன் தேர்வை மாநிலம் முழுவதும் முதல்நாளான நேற்று 18,239 பேர் எழுதினர். 10,579 பேர் ஆப்சென்ட் ஆகினர்.தமிழக வனத்துறையில் காலியாக உள்ள வனவர், வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமம் பெற்ற வனக்காப்பாளர் பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வனச்சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த பணியிடத்திற்கு மாநிலம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்தனர். இதில், வனவர் பணிக்கான ஆன்லைன் தேர்வு நேற்று தொடங்கியது. வரும் 9ம் தேதி வரை 4 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. வனக்காப்பாளர் பணிக்கான ஆன்லைன் தேர்வு வரும் 10, 11ம் தேதிகளிலும் நடக்கிறது.

வனவர் பணிக்காக நேற்று, காலையில் பொதுஅறிவு தேர்வும், பிற்பகலில் பொது அறிவியல் தேர்வும் ஆன்லைனில் நடந்தது. மாநிலம் முழுவதும் 28,818 பேர் தேர்வெழுத அழைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. இதில், 18,239 பேர் எழுதினர். 10,579 பேர் ஆப்சென்ட் ஆகினர். சேலம் மாவட்டத்தில் மேட்டுப்பட்டி சேலம் பொறியியல் கல்லூரி, அம்மாபேட்டை ஏவிஎஸ் பொறியியல் கல்லூரி, சீரகாப்பாடி அன்னபூர்ணா பொறியியல் கல்லூரி, காமலாபுரம் தீரஜ்லால் காந்தி பொறியியல் கல்லூரி, மேச்சேரி காவேரி பொறியியல் கல்லூரி ஆகிய 5 இடங்களில் தேர்வு நடந்தது.

இதில், 1090 பேர் பங்கேற்க அழைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், 719 பேர் மட்டும் தேர்வில் பங்கேற்றிருந்தனர்.

இத்தேர்வை மாவட்ட வன அலுவலர் பெரியசாமி, சமூக காடுகள் வளர்ப்பு திட்ட மாவட்ட வன அலுவலர் மகேந்திரன், உதவி வன அலுவலர் குமார் தலைமையிலான குழுவினர் கண்காணித்தனர். மேலும் இத்தேர்வு மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தியும் கண்காணிப்பு பணிகள் நடந்தது. பொதுஅறிவு தேர்வு எளிமையாகவும், பொது அறிவியல் தேர்வு கடினமாகவும் இருந்ததாக தேர்வெழுதிய இளைஞர்கள் தெரிவித்தனர்.

Related Stories: