450 ஏக்கரில் செழித்து விளைந்த செங்கரும்பு ஜனவரியில் அறுவடைக்கு தயாராகிறது

பள்ளிபாளையம், டிச.7: பொங்கல் பண்டிகையை எதிர்நோக்கி, பள்ளிபாளையம் வட்டாரத்தில் 450 ஏக்கரில் பயிரிட்டுள்ள செங்கரும்புகள் செழித்து வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளது.நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் வட்டாரத்தில், காவிரி கரையோரத்தில் உள்ள சமயசங்கிலி, களியனூர், குப்பாண்டபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், இந்த ஆண்டு சுமார் 450 ஏக்கரில் விவசாயிகள் செங்கரும்பு சாகுபடி செய்துள்ளனர். பொங்கல் பண்டிகையின் போது இங்கிருந்து பள்ளிபாளையம், ஈரோடு, திருச்செங்கோடு, சங்ககிரி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செங்கரும்பு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

நடப்பாண்டு போதிய மழை பெய்ததால், செங்கரும்பு செழித்து  வளர்ந்துள்ளது. இதுகுறித்து கரும்பு விவசாயிகள் கூறியதாவது: பொங்கல் பண்டிகைக்காகவும், ரேஷன் கடைகளில் இலவச பொங்கல் பொருட்கள் விநியோகத்துக்கு அரசு கொள்முதல் செய்யும் நம்பிக்கையிலும், கடந்த ஆண்டை விட கூடுதலாக கரும்பு பயிரிட்டுள்ளோம். கடந்த அரசு கொள்முதல் செய்ததால் கரும்புக்கு நல்ல விலை கிடைத்தது. இந்த ஆண்டும் கொள்முதல் செய்ய வேண்டும். தவிர வியாபாரிகளும் கரும்பை மொத்தமாக கொள்முதல் செய்ய ஆர்டர் கொடுத்துள்ளனர். ஜனவரி முதல் வார இறுதியில், பள்ளிபாளையம் பகுதியில் கரும்பு அறுவடை பணிகள் தொடங்கும். அதற்கு முன்பாக தமிழக அரசின் ரேஷன் கடைக்கான கொள்முதல் அறிவிப்பை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: