மத்தூர் ஒன்றியத்தில் குடிநீருக்காக 2 கிமீ நடந்து செல்லும் கிராம மக்கள் அதிகாரிகள் அலட்சியம்

போச்சம்பள்ளி, டிச.7: மத்தூர் ஒன்றியத்தில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில், கிராம மக்கள் 2 கி.மீ., சுற்றித்திரிந்து தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மத்தூர் ஒன்றியம் பெரியஜோகிப்பட்டி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக, கடந்த 15 ஆண்டுக்கு முன்பு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. 5 ஆண்டுகள் மட்டுமே செயல்பட்ட நிலையில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்படாமல் காட்சி பொருளாக கிடக்கிறது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால், காலி குடங்களுடன் சுமார் 2 கி.மீ., தூரம் நடந்து சென்று விவசாய கிணறுகளில் தண்ணீர் எடுத்து வரும் அவலநிலை உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றி 10 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதனால், காடு,மேடு சுற்றித்திரிந்து குடிநீர் எடுத்து வந்தோம். தற்போது, தேசிய நெடுஞ்சாலையை கடந்து 2 கி.மீ. தூரம் சென்று விவசாய கிணறுகளில் தண்ணீர் எடுத்து வரவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அங்கும் பற்றாக்குறை காரணமாக தண்ணீர் எடுக்க விடுவதில்லை. குடிநீர் பிரச்னையை தீரக்க கோரி, மத்தூர் பிடிஓ அலுவலகத்திற்கு பலமுறை மனு கொடுத்தும் கிணற்றில் போட்ட கல்லாகவே உள்ளது. எனவே, கலெக்டர் தனி கவனம் செலுத்தி பெரிய ஜோகிப்பட்டிக்கு காவிரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: