நிலத்தை விற்பதாக கூறி ₹15லட்சம் வாங்கி ஏமாற்றியதாக பெண் ராணுவ அதிகாரி மீது எஸ்பியிடம் விவசாயி புகார்

தர்மபுரி, டிச.7: தர்மபுரி மாவட்டம் பாகல்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சவுளூர் கிராமத்தை சேர்ந்தவர் சம்பத்(46). விவசாயி. இவர் நேற்று தர்மபுரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் பாகல்பட்டி அடுத்த சவுளூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். பாகல்அள்ளிக்குட்பட்ட 2 காலி பிளாட்டுகளுக்கு உரிமையாளரான சென்னையில் வசிக்கும் ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றிய பெண்ணிடம், கடந்த 13.7.2016 அன்று ₹5 லட்சமும், 4.10.2016 அன்று ₹10 லட்சம் என மொத்தம் ₹15 லட்சத்து 75 ஆயிரம் பணம் கொடுத்து எழுதி வாங்கியுள்ளேன். அதன்பின்னர் பிளாட்டை கிரையம் செய்து தருமாறு பலமுறை நேரிலும், போனிலும் தொடர்பு கொண்டு பேசினாலும் காலதாமதம் செய்து வந்தார். இந்நிலையில் எனக்கு விற்பனை செய்வதாக கூறப்பட்ட பிளாட்டுகள் வேறு நபருக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து முன்னாள் பெண் ராணுவ அதிகாரியிடம் கேட்ட போது, எனக்கு பிளாட்டுகளை கிரையம் செய்து தரமுடியாது என மறுத்ததோடு, எனது பணத்தையும் திருப்பி தர மறுக்கிறார். எனவே என்னை ஏமாற்றிய பெண் ராணுவ அதிகாரி மீது, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக தர்மபுரி நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: