அணையில் மீன் பிடிக்க ₹3.70 கோடிக்கு குத்தகை

கிருஷ்ணகிரி, டிச.7: கிருஷ்ணகிரி அணையில் தமிழக அரசு சார்பில், மீன்வளத்துறையின் கீழ் பல்வேறு இன மீன் குஞ்சுகள் வளர்த்து விற்பனை செய்து வந்தனர். இதில், போதிய லாபம் கிடைக்காத நிலையில் கடந்த 5 ஆண்டுக்கு முன்பு தனியாருக்கு மீன்பிடிக்க குத்தகை விடப்பட்டது. அப்போது, ஆண்டுக்கு ₹1 கோடியே 80 லட்சம் வீதம் 5 ஆண்டுக்கு குத்தகை விடப்பட்டது. இந்நிலையில், குத்தகை காலம் முடியும் தருவாயில் அணையின் பிரதான மதகு உடைந்து, அதிகளவில் தண்ணீர் வெளியேறியது. இதனால், மீன்பிடி குத்தகை நிறுத்தப்பட்டது. 9 மாதம் கழித்து மீண்டும் கிருஷ்ணகிரி அணையில் மீன்பிடிக்க ஒப்பந்தம் கோரப்பட்டது.

இதில், அதிக தொகை கேட்ட கிருஷ்ணகிரி பருவத ராஜகுல மீனவ கூட்டுறவு சங்கத்திற்கு ஆண்டிற்கு ₹3 கோடியே 70 லட்சம் வீதம் 5 ஆண்டுக்கு குத்தகை விடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த தொகையில் 10 சதவீதம் உயர்த்தி அரசுக்கு கட்ட வேண்டும். அதன்படி, கடந்த 4ம் தேதியில் இருந்து வரும் 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் தேதி வரை கிருஷ்ணகிரி அணையில் மீன் பிடித்து விற்பனை செய்யலாம். மீன் வளத்துறை நிர்ணயம் செய்யும் விலையில் மீனை விற்பனை செய்ய வேண்டும். பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கக்கூடாது என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் குத்தகைதாரர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளதாக, மீன்வளத்துறை உதவி இயக்குனர் தில்லைராஜன் தெரிவித்தார்.

Related Stories: