லளிகம் ஊராட்சியில் குப்பை எரிப்பதால் காற்று மாசு அபாயம் பொதுமக்கள் அவதி

தர்மபுரி, டிச.7: லளிகம் ஊராட்சியில் குப்பைகளை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.நல்லம்பள்ளி தாலுகாவிற்குட்பட்ட லளிகம் ஊராட்சியில், 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள், லளிகம் ஏரிக்கரையில் கொட்டப்பட்டு துப்புரவு பணியாளர்களால் தீ வைத்து எரிக்கப்படுகிறது. குப்பை கொட்டும் இடத்திற்கு அருகே, அரசு தொடக்கப்பள்ளி, கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் நெசவாளர் கூட்டுறவு தொழிற்கூடம் உள்பட ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. தினமும் குப்பைகளை எரிப்பதால், அந்த பகுதியே புகை மண்டலமாக மாறி விடுவதோடு, குப்பையில் பிளாஸ்டிக்கும் எரிவதால் அதை சுவாசிக்கும் குழந்தைகள், பெரியவர்கள் அனைவரும் சுவாச கோளாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர். இதனால், குப்பைகளை எரிக்காமல் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் குப்பைகளை தரம் பிரித்து, மக்கும் குப்பைகளை உரமாக்க ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: