கட்டிடங்கள் கட்ட விதிமீறி வரைபட அனுமதி? இரவோடு இரவாக பைல்களை தூக்கிய கமிஷனர் ஆய்வுக்கு தர மறுத்ததால் அதிரடி

சிவகாசி, டிச.7: சிவகாசி நகராட்சியில் பணம் பெற்றுக்கொண்டு முறைகேடாக  கட்டிடங்களுக்கு வரைபட அனுமதி கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, நகரமைப்பு ஆய்வாளர்களின்  அறையில் இருந்த  பைல்களை ஆணையாளர் இரவோடு இரவாக ஆய்வுக்கு எடுத்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகாசி நகராட்சி ஆணையாளராக பணிபுரிந்த முகம்மது சிராஜ் கடந்த செப்.30ம் தேதி ஓய்வு பெறும் நாளில் ஊழல் குற்றச்சாட்டு புகாரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அன்றே கரூரில் ஆணையாளராக  பணிபுரிந்த அசோக்குமார் சிவகாசி நகராட்சி ஆணையாளராக பணி நியமனம் செய்யப்பட்டார். இவர் ஆணையாளராக பதவி ஏற்றது முதல் நகராட்சி நிர்வாகத்தில் உள்ள பல்வேறு சீர்கேடுகளை சரிசெய்து வருகிறார். தினமும் காலையில் வார்டு பகுதிக்கு சென்று சுகாதார பணிகளை கண்காணித்து வருகிறார்.

இந்நிலையில் சிவகாசி நகராட்சி நகரமைப்பு பிரிவில் கட்டிட வரைபட அனுமதி வழங்க பணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதனால் நகரமைப்பு பைல்களை ஆணையாளர் திடீர் ஆய்வு செய்துள்ளார். அதில் கடந்த செப்.29 அன்று ஒரே நாளில் 15க்கும் மேற்பட்ட கட்டிடங்களுக்கு உடனடியாக வரைபட அனுமதி அளித்திருப்பது தெரிந்தது. செப்.30ல் ஆணையாளர் ஓய்வுபெற இருந்த  நிலையில் ஒரே நாளில் 15க்கும் மேற்பட்ட கட்டிடங்களுக்கு வரைபட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.   இது போன்ற பல்வேறு முறைகேடுகள் நகரமைப்பு பிரிவில் நடந்துள்ளதை அறிந்த ஆணையாளர்,  அந்த பிரிவு பெண் உதவியாளரிடம் அனைத்து பைல்களையும் எடுத்து வர சொல்லி உத்தரவிட்டுள்ளார். ஆனால் நகரமைப்பு அதிகாரிகள் தங்களது அறையில் அந்த பைல்களை மறைத்து வைத்துவிட்டனர்.

 

இது குறித்து தகவல் அறிந்த ஆணையாளர் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு நகரமைப்பு ஆய்வாளர்கள் அறைக்கு சென்று அங்கிருந்த அனைத்து பைல்களையும் எடுத்து சென்றுவிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அந்த பைல்களை ஆணையாளர் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார். ஆணையாளரின் இத்தகைய நடவடிக்கையை கண்டு அதிர்ந்து போன நகரமைப்பு ஆய்வாளர் ஒருவர் நேற்று விடுப்பில் சென்றுவிட்டார். ஆணையாளரின் இந்த அதிரடி நடவடிக்கையால் நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் மற்ற பிரிவு அலுவலர்களும் அதிர்ச்சியில்  உள்ளனர்.

Related Stories: