ரூ.2 கோடியில் கட்டப்பட்டது முதல்வர் திறப்புக்காக 2 ஆண்டுகளாக காத்திருக்கும் உள்விளையாட்டு அரங்கம் கட்டிடம், பொருட்கள் சேதமடைகின்றன

விருதுநகர், டிச.7: விருதுநகரில் ரூ.2 கோடி செலவில் கட்டப்பட்ட உள்விளையாட்டு அரங்கம், முதல்வர் திறந்து வைக்காததால் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் மூடி கிடக்கிறது.  விருதுநகர் சாத்தூர் ரோட்டில் 26 ஏக்கர் பரப்பளவில் மாவட்ட விளையாட்டு அரங்கம் 1995ல் கட்டி திறக்கப்பட்டது. அரங்கில் உள்ள கூடைப்பந்து, கபாடி, ஹாக்கி, புட்பால், பாக்சிங் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு திடல்களும் உரிய பராமரிப்பின்றி சிதிலமடைந்து கிடக்கிறது. இதனால் விளையாட வருவோரின் கூட்டம் வெகுவாக குறைந்துள்ளது.  விளையாட்டு திடல்கள் தரமாக இல்லாதால் மாவட்ட அளவிலான போட்டிகளை கூட முழுமையாக நடத்த முடியவில்லை. விளையாட்டு திடலில் சுற்றுச்சுவர் இல்லாததால் போலீஸ், ராணுவத்திற்கான ஆட்தேர்வு கூட நடத்த முடியவில்லை.

இந்நிலையில் ரூ.1.50 கோடியில் உள்விளையாட்டு அரங்கம், பார்வையாளர் அரங்கம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. உள் விளையாட்டு அரங்கின் உட்பகுதியில் இறக்குபந்து திடல்கள் மரத்தில் அமைப்பதற்கு ஸ்பான்சர்கள் கிடைக்காததால் தாமதப்பட்டது. மாவட்ட கலெக்டர் ஏற்பாட்டின் பேரில், ராம்கோ மற்றும் காளீஸ்வரி நிறுவனங்களின் உதவியுடன் ரூ.40 லட்சத்தில் மரத்தினால் ஆன 4 இறகுப்பந்து விளையாட்டு திடல்கள் அமைக்கப்பட்டன. 4 இறகுப்பந்து திடல்கள் அமைத்து பல மாதங்கள் ஆனநிலையில் உள் விளையாட்டு அரங்கம் திறக்கப்படவில்லை. இந்நிலையில் உள்விளையாட்டு அரங்கின் வெளிப்புற சுற்றுச்சுவர்களின் சிமெண்ட் பூச்சுகள் விழுந்து வருகின்றன. அரங்கின் உட்பகுதியில் ஈரகசிவால் சுவர்களில் வண்ணம் பெயர்ந்து விழுந்து வருகிறது.

சுமார் ரூ.2 கோடியில் உருவாக்கப்பட்ட  உள் விளையாட்டு அரங்கம் யாருக்கும் பயன்படாமல் பூட்டி வைத்திருப்பது விளையாட்டு ஆர்வலர்களை வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது.மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயக்குமார் ராஜா கூறுகையில், உள்விளையாட்டு அரங்கில் பணிகள் நிறைவடைந்து விட்ட நிலையில் முதல்வர் திறந்து வைப்பதற்காக காத்திருக்கிறோம். முதல்வர் திறந்து வைத்ததும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார்.

Related Stories: