சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீர் வழங்கும் ஆலையை திறக்க வழக்கு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

மதுரை, டிச. 7: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆலை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் சேது.சிவராமன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் மற்றும் விருதுநகர் மாவட்டம் மம்சாபுரம் பேரூராட்சிகள் தேர்வானது. மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் மூலம் திருப்பத்தூர் பேரூராட்சியில் சுத்திகரிக்கப்பட்ட தூய்மையான குடிநீர் வழங்கும் திட்டம் ரூ.10.89 கோடி மதிப்பில் தனியார் நிறுவனத்தால் ஆலை கடந்த 11.4.2012 முதல் துவக்கப்பட்டது. ஆலையின் மூலம் தினசரி 2,600 ரேஷன்கார்டுதாரர்களுக்கு 57 ஆயிரம் லிட்டர் தூய குடிநீர் இலவசமாக வழங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் மற்றொரு ஆலை மூலம் வெளியேற்றப்படும் கழிவுநீரை சுத்திகரித்து விவசாயத்திற்கு வழங்கப்பட்டது.

இந்த குடிநீர் ஆலை திடீரென கடந்த 12.2.2016ல் மூடப்பட்டது. இதனால் திருப்பதூர் முழுவதும் தற்போது குடிநீருக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. விவசாய பணிகளுக்கும் தண்ணீர் கிடைக்கவில்லை. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆலையின் இயந்திரங்கள் பயன்பாடு இல்லாததால் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சுத்திகரிக்கப்பட்ட தூய குடிநீர் வழங்கும் திட்டத்தை தொடரவும், குடிநீர் வழங்கும் ஆலையை உடனடியாக திறக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் மனு குறித்து மத்திய அறிவியல் தொழில்நுட்ப துறையின் நீர் சக்தி பிரிவின் இயக்குநர், பேரூராட்சிகளின் இயக்குநர், சிவகங்கை கலெக்டர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை டிச.17க்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: