ஊழியர்கள் பற்றாக்குறையால் வீதியில் அணிவகுத்து நின்ற அரசு பஸ்கள் காத்திருந்து அவதியடைந்த பயணிகள்

ராமநாதபுரம், டிச.7:  ஊழியர்கள் பற்றாக்குறையால் பஸ்களை இயக்க டிரைவர், கண்டக்டர் இல்லாமல் சாலையில் அரசு பஸ்கள் அணிவகுத்து நின்றன. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர். ராமநாதபுரத்தில் இருந்து அருகில் உள்ள கிராமங்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், 50க்கும் மேற்பட்ட டவுன் பஸ்களை இயக்குகின்றது. தினமும் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை கிராமங்களுக்கு சென்று வரும் பஸ்கள் பகல் வேளையில் டிரைவர், கண்டக்டர் டூட்டி மாற்றம் செய்து கொள்வார்கள். இந்நிலையில் நேற்று 10க்கும் மேற்பட்ட பஸ்களில் பிற்பகல் டிரிப் ஓட்டுவதற்கு ஊழியர்கள் வராததால் இயக்கப்பட வில்லை. இதனால் பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை கிராமங்களுக்கு இந்த பஸ்கள் செல்லவில்லை. இந்த பஸ்களை எதிர்பார்த்து நிற்கும் பயணிகள் சென்டர் பிளாக் பஸ் நிறுத்தத்தில் வெகுநேரமாக வெயிலில் நின்றபடி காத்திருந்தனர்.

இதுபற்றி ஊழியர்கள் கூறுகையில், நேற்று முன்தினம் டூட்டி மாறியவர்கள் இன்று (நேற்று) பகல் டூட்டி முடித்துவிட்டு இறங்கி சென்று விடுவார்கள். பகலில் டூட்டிக்கு வர வேண்டியவர்கள் வராததால் இந்த பஸ்கள் அனைத்தும் பகல் டிரிப் செல்ல வில்லை என்றார். ஊழியர் பற்றாக்குறையால் பல டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு கூடுதலாக வேலை பார்த்து வருகின்றனர். கூடுதலான நேரம் டிரைவர்கள் பணி செய்வதால் பல நேரங்களில் மன அழுத்தம் ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் டூட்டி மாறும் யானைக்கல் வீதி பகுதியில் செக்கர் ஒருவரை நியமித்து டிரைவர், கண்டக்டர் வராத நேரங்களில் உடன் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.

பல கிராமங்களில் ஏழை எளிய மக்கள் டவுன் பஸ் வரும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றனர். பகல் டிரிப் கட்டானதால் மாலை நேரத்தில் பள்ளி முடிந்து கிராமங்களுக்கு செல்லும் மாணவர்கள் திரும்பி செல்ல காத்திருக்கும் நிலை உள்ளதாக தெரிவித்தனர். அரசு போக்குவரத்து கழக நகர் கிளை மேலாளர் ரவி கூறுகையில். டிரிப் மாறும்போது சில பஸ்கள் தாமதமாக செல்கின்றன. விரைவில் சரி செய்யப்படும் என்றார்.

Related Stories: