வாசகர்களை அச்சுறுத்தும் கிளை நூலக கட்டிடம்

ராமநாதபுரம், டிச.7:  ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி ஒன்றியம் ரெகுநாதபுரம் கிராமத்தில் சுமார் 8 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் வளர்ந்து வரும் கிராமமாக ரெகுநாதபுரம் உள்ளது. தற்போது இந்த ஊரில்  செயல்பட்டு வரும் கிளை நூலக கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், வாசகர்கள் வருகை குறைந்து விட்டது. 1984ம் ஆண்டு சித்த மருத்துவமனையாக இருந்த  கட்டிடத்தில்  1997ம் ஆண்டு ஊர்புற நூலகமாக ஆரம்பிக்கப்பட்டது. வாசகர்கள் வருகை அதிகமாக இருந்ததால்  2013ம் ஆண்டு கிளை நூலகமாக தரம் உயர்த்தப்பட்டது. தினமும் 50 முதல் 75 வாசகர்கள் வருகின்றனர்.

நூலகத்தில் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. சுமார் ஆயிரம் உறுப்பினர்களை கொண்டதாகவும் உள்ளனர். மிகவும் பழமையான கட்டிடத்தில் கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. நூலகத்தில் வாசகர்கள் அமர்ந்து புத்தகங்களை வாசிக்கும் இடத்தின்   மேற்பகுதி கான்கிரீட் தினமும் பெயர்ந்து விழுவதாக கூறுகின்றனர். புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கும் வாசகர்கள் அடிக்கடி மேலே பார்த்து பார்த்து விழுந்து விடுமோ என்ற அச்சத்துடன் படித்துக் கொண்டிருக்கின்றனர். மழை காலங்களில் கட்டிடத்தின் மேல் பகுதியில் தண்ணீரில்  ஊறிய சிமென்ட் பூச்சு காரைகள் துண்டுகளாக விழுந்து கொண்டே இருக்கிறது. இதனால்  மழை பெய்யும் நேரங்களில் பலர் நூலகத்திற்கு உள்ளே வர பயப்படுகின்றனர்.

இதுபற்றி வாசகர் ஒருவர் கூறுகையில், நூலகத்தில் பயனுள்ள பல புத்தகங்கள் இருப்பதால் பள்ளி, கல்லூரி தேர்வு, அரசு போட்டித் தேர்வு  நேரங்களில் குறிப்புகள் எடுப்பதற்கு அதிகமான மாணவர்கள் வருகின்றனர்.

கட்டிடம் மோசமாக உள்ளதால் புத்தகங்களை எடுத்து வாசலில் நின்றபடி படிக்கும் நிலையில் நூலகம் உள்ளது. கிராமங்களில் உள்ள கிளை நூலகங்களுக்கு கிராமத்தின் சார்பில் இடம் ஒதுக்கி கொடுத்தால் நூலக நிர்வாகம் கட்டிடம் கட்டித்தரப்படும் என்ற விதி உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரெகுநாதபுரம் ஊராட்சியின் மூலமாக நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டிக்கொள்ள இடம் வழங்கப்பட்டது. அதற்கான பட்டா மாறுதலுக்குக்காக கீழக்கரை தாசில்தார் அலுவலகத்தில் மனு அளித்தும் இன்று வரை பட்டா வழங்க வில்லை. இதேநிலை நீடித்தால் நூலகம் இடிந்து விழும். ரெகுநாதபுரத்தில் ஊராட்சி நிர்வாகத்தால் சேவை மையம் போன்ற கட்டிடங்கள் கட்டப்பட்டு செயல்படாமல்  உள்ளது. புதிய கட்டிடம் கட்டும் வரை தற்காலிகமாக  நூலகத்தை அங்கு மாற்றலாம் என்றார்.

கீழக்கரை தாசில்தார் சரவணன், நூலக கட்டிடத்திற்காக ஊராட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்கு இடம் மாறுதல் சான்று  வழங்க வேண்டும். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். படிக்கும் ஆர்வம் உள்ள கிராமப்புற மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளுடன் நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர மாவட்ட நூலகம், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தாசில்தாரிடம் மனு

மாவட்ட நூலக அலுவலர் கண்ணன் கூறுகையில், ரெகுநாதபுரம் கிளை நூலகத்திற்கு ஊராட்சியின் சார்பில் வழங்கப்பட்டுள்ள  இடத்திற்கு முறையான பட்டா மாறுதல் செய்ய வில்லை. புதிய நூலக கட்டிடம் கட்டுவதற்கான  அரசின் விதிகளின் படி மாவட்ட நூலக அலுவலரின்  பேரில் பட்டா மாறுதல் செய்ய வேண்டும். கடந்த 10.8.2016 அன்று சர்வே எண்.149/3ல் இசேவை மையம் அருகில் உள்ள 10 சென்ட்   இடத்திற்கு  பட்டா மாறுதலுக்காக கீழக்கரை தாசில்தாரிடம் மனு அளித்துள்ளோம்.  ரெகுநாதபுரம் ஓஎன்ஜிசி நிறுவனம் கிளை நூலகத்திற்கான  புதிய கட்டிடம் கட்டித்தருவதாக தெரிவித்துள்ளதாக கூறினார்.

Related Stories: