ராமநாதபுரம்-ராமேஸ்வரம் சாலையில் பேரிகார்டுகள் இல்லாததால் விபத்து அதிகரிக்கும் வாய்ப்பு

ராமநாதபுரம், டிச.7:  ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில் ராமநாதபுரம்-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையின் முக்கிய இடங்களில் பேரிகார்டுகள் இல்லாததால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. ராமேஸ்வரம் புண்ணிய தலமாக உள்ளதால் வெளிமாநிலம், வெளிமாவட்டம் என நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வாகனங்களின் வந்து செல்கின்றனர். இதுதவிர அரசு பஸ்கள், டூவிலர்கள், சரக்கு வாகனங்கள் என அளவுக்கு அதிகமான வாகனங்கள் தினமும் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வதால் வாகன விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.

ராமநாதபுரத்திலிருந்து ராமேஸ்வரம் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஏற்கனவே நாகாச்சி, உச்சிப்புளி, பிரப்பன்வலசை, வேதாளை, மண்டபம், தங்கச்சிமடம் போன்ற இடங்களில் வாகனங்களின் வேகத்தை குறைக்க பேரிகார்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. நாளடைவில் அவைகள் முறையாக பராமரிக்கப்படாததால் தற்போது தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அகற்றப்பட்டுள்ளன. தற்போது ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்துள்ள நிலையில் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் வருகின்றனர்.

இந்நிலையில் முக்கிய இடங்களில் பேரி கார்டுகள் இல்லாததால் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விரைவில் விபத்து ஏற்படும் முக்கிய இடங்களிலோ அல்லது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களிலோ பேரி கார்டுகளை அமைத்தால்தான் ஐயப்ப பக்தர்கள் வரத்து கூடியுள்ள நிலையில் வாகன விபத்துக்களை ஒரளவிற்கு தடுக்கலாம் என பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

இதுகுறித்து சுந்தரமுடையான் முருகன் கூறுகையில், விபத்துக்களை தடுப்பதற்காகதான் பேரிகார்டுகள் சாலையில் வைக்கப்படுகின்றன. எந்த காரணத்திற்காக அவைகள் சாலையில் இருந்து அகற்றப்பட்டதென தெரியவில்லை. தற்போது சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்துள்ள நிலையில் போக்குவரத்துறை போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

Related Stories: