விரைவில் பாராளுமன்ற தேர்தல் வருவதால் 1106 பள்ளி, கல்லூரிகளில் தேர்தல் கல்விக் குழு அமைப்பு

மதுரை, டிச. 7: தேர்தல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த 1106 பள்ளி, கல்லூரிகளில் தேர்தல் கல்விக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த செப்.1ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் மொத்தம் 25 லட்சத்து 8 ஆயிரத்து 675 பேர் வாக்காளராக உள்ளனர். இதனைத்தொடர்ந்து வரும் 1.1.2019ம் அன்று, 18 வயது பூர்த்தியடைந்தவர்களை புதிய வாக்காளராக சேர்க்க செப்.1 முதல் அக்.31ம் தேதி வரை விண்ணப்பம் பெறப்பட்டது. 4 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

இதில் புதிய வாக்காளராக சேர படிவம்-6ஐ மட்டும் 63 ஆயிரத்து 971 பேரும், பெயர் நீக்கத்திற்கான படிவம்-7ஐ 5 ஆயிரத்து 901 பேரும், திருத்தம் தொடர்பாக படிவம்-8ஐ 5 ஆயிரத்து 2 பேரும். ஒரே தொகுதியில் முகவரி மாற்றத்திற்கான படிவம்-8ஏவை 4 ஆயிரத்து 105 பேரும் என மொத்தம் 78 ஆயிரத்து 979 பேரிடம் மனுக்கள் பெறப்பட்டன. வாக்காளராக சேர விண்ணப்பித்தவர்களின் மனுக்கள் தேர்தல் ஆணையத்தின் சாப்ட்வேரில் பதிவேற்றம் செய்யப்பட்டு, 2,716 வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மூலம் விசாரணை நடத்தி, வாக்காளராக சேர பரிந்துரை செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் வீடு வீடாக சென்று விசாரித்து உண்மையாக குடியிருப்பவர்களின் பெயர்கள் உரிய ஆவணம், முகவரி சரியாக இருந்தால், அவர்களை வாக்காளராக சேர்க்க சிபாரிசு செய்து வருகின்றனர். வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களால் சிபாரிசு செய்யும் மனுக்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும். புதிய வாக்காளர் பட்டியல் வரும் ஜன.4ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

இந்நிலையில், அடுத்தாண்டு, ஏப்ரல், மே மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதால், ஓட்டுபோடுவது, வாக்காளராக சேருவதின் முக்கியத்துவம் குறித்து, வாக்காளருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மதுரை மாவட்டத்தில், 1106 பள்ளி, கல்லூரிகளில் தேர்தல் கல்விக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் மாணவர்களால் ஏற்படுத்தப்பட்ட குழு ஆகும். இந்த குழுவினர் வாக்காளர் பெயர் சேர்த்தல், வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு பிரசாரம், ஊர்வலம் நடத்தி வருகின்றனர். மேலும் தேர்தல் தொடர்பாக ஆணையமானது 6 விழிப்புணர்வு வீடியோக்கள் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: