காரைக்கால் கடலில் மாயமான மீனவர் குடும்பத்திற்கு உடனே நிவாரணம் அறிவிக்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

காரைக்கால், டிச.7: கடலில் மாயமான காரைக்கால் மேடு மற்றும் மீனவர் குடும்பத்துக்கு உடனே நிவாரணம் அறிவிக்க வேண்டும். என, காரைக்கால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.காரைக்கால் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர்கள் நிலவழகன், வின்சென்ட் மற்றும் காரைக்கால் வட்ட செயலர் தமீம் ஆகியோர் மாவட்ட கலெக்டர் கேசவனை நேரில் சந்தித்து வழங்கிய மனுவில் கூறியிருப்பது;காரைக்கால் கோட்டுச்சேரிமேடு  கிராமத்தை சேர்ந்த ஆரோக்கியராஜ் என்பவரது விசைப்படகில், கடந்த 30ம் தேதி 13 பேர் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்றுவிட்டு, கரை திரும்பும் போது பலத்த காற்றின் வேகத்தில் படகு மூழ்கியது. இதில் காரைக்கால் மேட்டை சேர்ந்த நீலவர்ணன் என்பவரும், நாகை தரங்கம்பாடி சின்னகுடியைச் சேர்ந்த ஒருவரும் மாயமாகினர். மேலும் 11 மீனவர்கள் கடலில் தத்தளித்து வேறு படகின் மூலம் கரை திரும்பினர். மாயமான இரு மீனவர்களின் நிலை குறித்து இதுவரை தெரியவில்லை. நீலவர்ணனுக்கு மனைவி, 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

காரைக்கால் மேடு மற்றும் மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் புதுச்சேரி முதல்வரை சந்தித்து நிவாரணம் கோரியுள்ளனர். ஆனால், இதுவரை அரசு நிவாரணம் தருவதற்கான உத்தரவாதத்தை அளிக்கவில்லை. மாயமான மீனவரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு  அரசு வேலையும், அவரது குடும்பத்துக்கு உரிய நிவாரணத்தையும் புதுச்சேரி அரசு உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: