திருச்சி புத்தூரில் வெறி நாய் கடித்து முதியவர், மாணவன் காயம் பொதுமக்கள் அச்சம்

திருச்சி, டிச. 7: திருச்சி புத்தூர் ஆண்டவர் காலனியை சேர்ந்தவர் தீனா(9). அப்பகுதியில் உள்ள பாத்திமா பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்றுமுன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வெறி நாய் கடித்தது. அருகில் இருந்தவர்கள் நாயிடமிருந்து சிறுவனை மீட்டனர். நாய் கடித்ததில் காலில் காயம் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதேபோல் புத்தூரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் முத்தையா(60). இவர் 2 நாட்களுக்கு முன் உழவர் சந்தைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். இவரையும் தெரு நாய் கடித்தது. காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நேற்று வீடு திரும்பினார்.

புத்தூர் பகுதியில் நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொது மக்கள் அச்சடைந்துள்ளனர். இதுபற்றி புத்தூரை சேர்ந்த சமூக ஆர்வலர் சார்லஸ் கூறுகையில், புத்தூர் மீன் மார்க்கெட்டில் கொட்டப்படும் மீன் கழிவுகளை தின்பதற்காக இந்த பகுதியில் நாய்கள் கூட்டமாக திரிகின்றன. இவைகளால் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. சிறுவர்கள் அந்த பகுதியில் நடக்கவே அச்சப்படுகின்றனர். இதை கட்டுப்படுத்த மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நாய்களை பிடித்து புறநகரிலோ அல்லது வனப்பகுதியிலோ விட வேண்டும். இல்லையெனில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றார்.

Related Stories: