பாபர் மசூதியை மீண்டும் அதே இடத்தில் கட்ட வலியுறுத்தி நாகர்கோவிலில் தமுமுக, எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், டிச.7: பாபர் மசூதியை மீண்டும் அதே இடத்தில் கட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமுமுக, எஸ்டிபிஐ ஆகியவற்றின் சார்பில் நாகர்கோவிலில் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடந்தது.பாபர் மசூதியை மீண்டும் அதே இடத்தில் கட்டி கொடுக்க வேண்டும், பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் என சிபிஐ குற்றம்சாட்டியுள்ளவர்களுக்கு உடனே தண்டனை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் (தமுமுக) சார்பில் நேற்று நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பங்கேற்றவர்கள் கருப்பு சட்டை அணிந்து கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.ஆர்ப்பாட்டத்திற்கு தமுமுக மாவட்ட தலைவர் அன்வர் ஹூசைன் தலைமை வகித்தார். செயலாளர் திருவை செய்யது அலி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கண்ணன், தமுமுக பேச்சாளர் ஏர்வாடி ரிஸ்வான், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அன்வர் சதாத் உள்ளிட்டோர் பேசினர். தமுமுக மாவட்ட துணை செயலாளர்கள், மாவட்ட அணி செயலாளர்கள், நகர, கிளை, வார்டு நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள், ஜமாத்தார்கள் கலந்துகொண்டனர்.

மாவட்ட செயலாளர் திருவை செய்யது அலி பேசுகையில், ‘பாபர் மசூதி இடிக்கப்பட்ட அன்று இரவு அப்போதைய பிரதமர் நரசிம்மராவ், நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பள்ளி வாசல் மீண்டும் அதே இடத்தில் கட்டிக்கொடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். உச்சநீதிமன்றத்தில் மசூதி இடிப்புக்கு பிறகு நடைபெற்ற விசாரணையின்போது ஆஜரான அன்றைய உத்திரபிரதேச மாநில அரசின் வழக்கறிஞரும், இன்றைய இந்திய அரசின் தலைமை வழக்கறிஞருமான கே.கே.வேணுகோபாலிடம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அளித்த வாக்குறுதியை மீறி பள்ளி வாசல் இடிக்கப்பட்டது குறித்து விசாரித்தபோது கே.ேக.வேணுகோபால், ‘நான் அவமானத்தால் தலைகுனிகிறேன். மாட்சிமை தாங்கிய நீதிமன்றம் மீண்டும் அதனை கட்டுவதற்கு உத்தரவிடலாம்’ என்று குறிப்பிட்டார். இவற்றை அடிப்படையாக கொண்டு பள்ளி வாசலை அதே இடத்தில் மீண்டும் கட்டிக்கொடுக்க வேண்டும்’ என்றார்.

எஸ்டிபிஐபாபர் மசூதி இடிப்பு வழக்கை விரைந்து முடிக்க வேண்டும், மீண்டும் பாபர் மசூதியை அதே இடத்தில் கட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, எஸ்டிபிஐ சார்பில் நாகர்கோவிலில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஹாஜாமைதீன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் செய்யது இஸ்ஹாக் வரவேற்றார். மாநில செயலாளர் அகம்மது நவவி, பச்சைதமிழகம் கட்சி தலைவர் சுப.உதயகுமார், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் மாகீன் அபுபக்கர், ஜனநாயக கிறிஸ்தவ பேரவை உயர்மட்டக்குழு ஆலோசகர் ஜார்ஜ் பொன்னையா, எஸ்டிபிஐ மாவட்ட துணை தலைவர் ஹாஜி ஜாகீர் உசேன், மாவட்ட செயலாளர் ஜெகுபர் அலி, மாவட்ட, தொகுதி, நகர தலைவர்கள், மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் ஹபிபா, நபிலா, அப்துல் ரஸாக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாவட்ட செயலாளர் அன்சார் நன்றி கூறினார்.

பின்னர் எஸ்டிபிஐ மாநில செயலாளர் அகம்மது நவவி கூறியதாவது: உலக அரங்கில் இந்தியாவிற்கு தலை குனிவை பெற்றுத்தந்த பாபர் மசூதி இடிப்பு நடைபெற்று 26 ஆண்டுகாலம் கடந்த பின்னரும் நீதி கிடைக்கவில்லை. இடித்தவர்கள் தண்டிக்கப்படவில்லை. பாபர் மசூதி இடிக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் அதே இடத்தில் மசூதி கட்டி தரப்படும் என்று அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. நீதித்துறையின் இறுதி தீர்ப்புக்காக காத்திருக்கும் இந்த சூழலில் எந்த சமசர முயற்சிகளையும் முஸ்லீம்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள். நீதிக்காக முஸ்லீம்களுடன் எஸ்டிபிஐ கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டே இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: