சிக்கலில் மாட்டிய போலீசார் பிரேத பரிசோதனை செய்யாமல் உடல் அடக்கம் இறப்பு சான்றிதழுக்கு மனைவி தவிப்பு

நாகர்கோவில், டிச.7: நாகர்கோவில் அருகே பிரேத பரிசோதனை செய்யாமல், உடலை புதைத்த போலீசார் தற்போது சிக்கலில் சிக்கியுள்ளனர். பூதப்பாண்டி அருகே முடங்கன்விளையை சேர்ந்தவர் செல்வராஜ். தற்போது அவரது குடும்பத்தினர் திருப்பதிசாரத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட செல்வராஜ் மனஉளைச்சல் காரணமாக வீட்டை விட்டு வெளியேறி சுசீந்திரம் பகுதிக்கு வந்து விடுவதும், பின்னர் அவரது மனைவி சுபா தேடி பிடித்து அழைத்து வருவதும் வழக்கமாம். இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சுசீந்திரம் அருகே நல்லூரில் செல்வராஜ் தங்கி இருந்துள்ளார். அப்போது நோயின் தீவிரம் காரணமாக செல்வராஜ் இறந்து விட்டார். இதுபற்றி அப்பகுதி மக்கள் சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அங்கு வந்த எஸ்.எஸ்.ஐ மற்றும் போலீசார்  வழக்கு பதிவு செய்யாமலும், பிரேத பரிசோதனைக்கு உடலை அனுப்பாமலும், அங்கேயே புதைத்து விட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே கணவரை தேடி நல்லூர் வந்த சுபாவிற்கு தனது கணவர் செல்வராஜ் இறந்து போன விபரமும், அவரது உடலை போலீசார் தன்னிச்ைசயாக புதைத்த விபரமும் தெரிய வந்துள்ளது. இதற்கிடையே மிகவும் ஏழ்மை நிலையில் வாடிய சுபாவிற்கு மகனின் படிப்பு உதவி தொகைக்காக செல்வராஜின் இறப்பு சான்றிதழ் தேவைப்பட்டுள்ளது. இதற்காக முடங்கன்விளை பகுதியில் ஏற்கனவே செல்வராஜ் சிகிச்சை பெற்ற மருத்துவ ஆவணங்கள் அடிப்படையில் இறப்பு சான்று கேட்டு விண்ணப்பித்துள்ளார். அப்போது, இறந்து போனது நல்லூர் என்பதால், அங்குதான் இறப்பு சான்றிதழ் பெற முடியும் என சுகாதார பிரிவு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதன்படி நல்லூர் வந்தபோது, அங்குள்ள சுகாதார அலுவலர், போலீசார் வழக்கு பதிவு செய்த எப்.ஐ.ஆர் நகல் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கை அவசியம். எனவே அவற்றை கொண்டு வரும்படி கூறியுள்ளார். இதனையடுத்து சுசீந்திரம் இன்ஸ்பெக்டரிடம் சென்று எப்.ஐ.ஆர் நகல் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கை ஆகியவற்றை கேட்டுள்ளார். இதனையடுத்து, சம்பவத்தன்று நல்லூர் சென்ற எஸ்.எஸ்.ஐ பெயரைக் கூறி, அவரிடம் போய் சான்றிதழ்களை வாங்கிக் கொள்ளும்படி கூறியுள்ளார். சம்பந்தப்பட்ட எஸ்.எஸ்.ஐயிடம் கேட்டபோது, அனாதை உடல் என்பதால் புதைத்து விட்டோம். அதற்கே நிறைய பணம் செலவாகிவிட்டது. உனது கணவர் உடலை தோண்டி தருகிறேன். வேண்டுமானால் கொண்டு போ. பிரேத பரிசோதனைக்கு யார் பணம் செலவு செய்வது என கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து வழக்கறிஞர்கள் மூலம் சம்பந்தப்பட்ட எஸ்எஸ்ஐயிடம் எப்.ஐ.ஆர் கேட்டுள்ளனர். அதற்கு அவர், எப்.ஐ.ஆருக்கு பதில் ஒரு தாளில், செல்வராஜ் உடல் நிலை பாதிப்பால் இறந்து விட்டார். எனவே இறப்பு சான்றிதழ் வழங்கலாம் என எழுதி, காவல்துறை சீலையும் வைத்து பரிந்துரை கடிதம் கொடுத்துள்ளார். இதன் அடிப்படையில், ஊராட்சி கிளார்க்கும், ேநாயால் இறந்தது உண்மை  என கடிதம் தந்துள்ளதாக தெரிகிறது.

ஆனால், சுகாதார ஆய்வாளரோ, எப்.ஐ.ஆர் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கை இன்றி சான்றிதழ் எப்படி  தரமுடியும். மீறி வழங்கினால், தனது வேலைக்கு சிக்கல் எனக்கூறி மறுத்து விட்டார். இதனால் தற்போது என்ன செய்வது எனத் தெரியாமல் விழிபிதுங்கி உள்ளார். இதுகுறித்து, எஸ்.பி மற்றும் கலெக்டரிடம் புகார் அளிக்க சுபாவின் உறவினர்கள் முடிவு செய்துள்ளனர்.காவல் நிலையத்தில் பைக் மாயம்களியாக்காவிளை காவல் நிலையத்தில் சாலை விபத்து ஒன்றில் சிக்கிய வாலிபர் இறந்து விட்டார். இந்நிலையில் இறந்து போன வாலிபரின் பைக்கை போலீஸ் காரர் ஒருவர் விற்பனை செய்து விட்டதாக கூறப்படுகிறது. தற்போது இந்த விவகாரமும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: