சுசீந்திரம் டாஸ்மாக் அருகே மர்ம நபர்கள் பறித்து சென்ற

₹ 2.49 லட்சத்தை ஊழியர்கள் கட்ட உத்தரவு

நாகர்கோவில், டிச.7:  குமரி மாவட்ட டாஸ்மாக் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் அதன் நிர்வாகிகள், செண்பகராமன்புதூரில் உள்ள டாஸ்மாக் நிர்வாக அலுவலகத்தில், மாவட்ட மேலாளரை சந்தித்து ஒரு மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது :

குமரி மாவட்டம் சுசீந்திரம் காவல் நிலையத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நல்லூர் பகுதியில் டாஸ்மாக் அரசு மதுபான கடை உள்ளது. இங்கு மேற்பார்வையாளராக முருகன், விற்பனையாளர்களாக வின்சென்ட், டொனால்டு, தீஸ்மாஸ், உதவி விற்பனையாளராக ராஜேஸ்வரன் தாஸ் ஆகியோர் உள்ளனர். கடந்த மாதம் 2ம் தேதி இரவு விற்பனை முடிந்து கடையை மூடி விட்டு முருகன் மற்றும் பணியாளர்கள் வீட்டுக்கு புறப்பட்டனர். அப்போது வந்த கும்பல் அரிவாளால் வெட்டி , முருகனிடம் இருந்த ₹ 2 லட்சத்து 49 ஆயிரத்து 30 ஐ பறித்துக்கொண்டு சென்று விட்டனர். இதை தடுக்க வந்த ஊழியர்களையும் அரிவாளால் வெட்ட முயன்றனர். கடை அருகிலேயே இந்த சம்பவம் நடந்தது. சுசீந்திரம் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர். சம்பவம் குறித்து ஏற்கனவே டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் எழுத்து பூர்வமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. எப்.ஐ.ஆர். நகலும் கொடுக்கப்பட்டு உள்ளது.

சமூக விரோதிகளால் கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டு விற்பனை பணம் கொள்ளையடிக்கப்பட்ட பிறகும் சம்பவ இடத்தை எந்த அதிகாரியும் இதுவரை பார்க்க வில்லை. இது மட்டுமின்றி தற்போது சமூக விரோதிகளால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை டாஸ்மாக் கடை பணியாளர்கள் தங்களது ெசாந்த பணத்தில் இருந்து கட்டுமாறு வாய்மொழியாக அதிகாரிகள் கூறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் உயிர் தப்பிய ஊழியர்கள் மேலும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். எனவே இந்த நடவடிக்கையை கைவிட்டு விட்டு, காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கண்டுபிடித்து பணத்ைத மீட்க வேண்டும். மேலும் டாஸ்மாக் கடை பணியாளர்கள் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவர்களை அச்சுறுத்தும் நடவடிக்கையை அதிகாரிகள் கைவிட வேண்டும்.  இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.  நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், அசோக்குமார், பாஸ்கர், சந்திரசேகர் உள்ளிட்டோர் வந்து மனு அளித்தனர்.

Related Stories: