பயிர் காப்பீட்டு திட்டத்தில் இழப்பீடு வழங்க கோரி விவசாயிகள் முற்றுகை

உடுமலை, டிச.7: பயிர் காப்பீடு திட்டத்தில் இழப்பீடு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் முற்றுகை போராட்டம் நேற்று நடந்தது. பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தை கடந்த 2016-17ம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அதில், உடுமலை, மடத்துக்குளம் மற்றும் குடிமங்கலம் வட்டாரங்களில் மக்காச்சோளம் பயிருக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் காப்பீடு செய்திருந்தனர். ஆனால், ஓராண்டுகளுக்கும் மேலாக இழப்பீடு வழங்காததால் விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் நடப்பாண்டு துவக்கத்தில் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. ஆனால், நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவில்லை. இந்நிலையில், விடுபட்ட விவசாயிகளுக்கும், காப்பீடு நிறுவனத்துக்கும் கலந்தாய்வு கூட்டம் வேளாண் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அதில், இழப்பீடு தொகை உடனடியாக வழங்கக்கோரி வேளாண் அலுவலர்களை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது: உடுமலையில், 912 விவசாயிகள், 1,900 ஏக்கரில் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்திலும் விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். அதில், கூட்டுறவு கடன் சங்கத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு மட்டுமே விடுப்பட்டுள்ளது.

முறையான சான்றிதழ் இல்லாததால் இழப்பீடு தொகை விடுவிக்கப்பட்டும் திரும்பி சென்றுள்ளது. இந்நிலையில் மீண்டும் விவசாயிகளின் தகவல் சேகரிக்கப்பட்டுள்ளது. நேற்று, கடன்பெறாத, 131 விவசாயிகளும், 301 கடன் பெற்ற விவசாயிகளும் பதிவு செய்துள்ளனர். விரைவில் விடுபட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும்.

Related Stories: