சந்தையில் 20% விலை குறைத்து வாங்கும் நிலையில் கூலி உயர்வு கேட்டு வேலை நிறுத்தம் செய்வது மிரட்டும் செயல்

திருப்பூர், டிச.7: உலக பின்னலாடை வர்த்தக சந்தையில் ஆடைகள் 10 முதல் 20 சதவீதம் வரை விலையை குறைத்து பையர்கள் வாங்கி வரும் நிலையில் சிறு, குறு ஜாப்-ஒர்க் நிறுவனங்கள் கூலி உயர்வு கேட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது நியாயமில்லை என பின்னலாடை உற்பத்தி ஏற்றுமதியாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

இந்திய பின்னலாடை உற்பத்தியில் 60 சதவீதம் ஆடைகள் கொங்கு மண்டலத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களுக்கு தேவையான மூலப்பொருட்களான பஞ்சு, நூல் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வால்  கொள்முதல் செலவு அதிகரிக்கிறது. துணிகளுக்கு சாயமிடும் செலவு மற்ற நாடுகளை காட்டிலும் 50 சதவீதம் அதிகம். பிளிச்சிங், ஸ்டிம், நிட்டிங், பிரிண்டிங், பவர் டேபிள் ஒர்க், லேபிள், எலாஸ்டிக், அயனிங், பேக்கிங் ஆகியவற்றின் செலவு கடந்த 10 ஆண்டுகளில் பல மடங்கு உயர்ந்துள்ளது. திருப்பூரில் பழைய நிட்டிங் இயந்திரங்களை வைத்துக்கொண்டு அதிக தொழிலாளர்கள் வேலை செய்வதால் கூடுதல் செலவாகிறது. திருப்பூர் ஜாப்-ஒர்க் நிறுவனங்கள் பழைய இயந்திரங்களை அகற்றி புதிய நவீன இயந்தரங்களை பயன்படுத்தினால் மட்டுமே தொடர்ந்து பி்ன்னலாடை துறையில் நீடிக்க முடியும்.இந்த நிலையில், திருப்பூர் பின்னலாடை சார்ந்த ஜாப்-ஒர்க் நிறுவனங்கள் கூலி உயர்வு, அட்டை பெட்டி, எலாஸ்டிக் ஆகிய பொருட்கள் விலையேற்றத்தால் ஏற்றுமதியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க செயலாளர் விஜயகுமார் கூறியதாவது: உலக பின்னலாடை சந்தையில் கடும் போட்டிகளிடையே திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் வெளிநாட்டு பையர்களிடம் போராடி ஆர்டர் பெற்றுவருகின்றனர். இந்நிலையில், பின்னலாடை சார்ந்த தொழில் துறையினர், ஏற்றுமதியாளர் சங்க உறுப்பினர்களிடையே கலந்து பேசி கூலி உயர்வு, பொருட்களின் விலையேற்றம் சந்தை நிலவரப்படி முடிவு செய்யலாம். இதைத்தவிர்த்து, பின்னலாடை ஏற்றுமதியாளர்களை மிரட்டும் வகையில் வேலை நிறுத்தம் செய்வது வேதனை அளிக்கிறது. புதிய பொருளாதார கொள்கையால் கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசு வழங்கி வந்த சலுகைகள் படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்திய பின்னலாடைகளின் விலை அதிகமாக இருப்பதால் பையர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.  திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் மூலம் கொள்முதல் குழு துவங்கப்பட்டு பின்னலாடை உற்பத்திக்கு தேவையான பொருட்களை உலக நாடுகளில் தரமான பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களை கண்டறிந்து  டீலர்களிடம் வாங்காமல் நேரடியாக தயாரிப்பு நிறுவனத்திடம் வாங்கி வருகிறோம்.

கடந்த 10 ஆண்டுகளாக இந்திய பின்னலாடை உற்பத்தி, ஏற்றுமதி நிறுவனங்களுக்கு 10 முதல் 20 சதவீதம் வரை விலை குறைத்து வழங்கப்படுகிறது. இதுதவிர, குறைந்த தொழிலாளர்களை வைத்து அதிக உற்பத்தி செய்து இழப்பை சரிசெய்து வருகிறோம். வேலை நிறுத்தம் செய்து விலையை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்துவது நியாயமில்லை. போதிய லாபம் இல்லையெனில் வர்த்தகத்தை நிறுத்தும் பட்சத்தில் திருப்பூர் பின்னலாடை சார்ந்த தொழில் நிறுவனங்களின் நிலை கவலைக்கிடமான சூழல் ஏற்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: