குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி அலுவலகம் முற்றுகை

வெள்ளக்கோவில், டிச.7: குடியிருப்பு பகுதியில் குப்பை கொட்ட எதிர்ப்புத் தெரிவித்து நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், நகராட்சி ஆணையர் சங்கரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: 17, 20, 21 வது வார்டுகளுக்கு உட்பட்ட சீரங்கராயக்கவுண்டன்வலசு சாலை மேல்நிலை குடிநீர்த் தொட்டி எதிர்புறம் பொது மயானம் உள்ளது. இதனைச் சுற்றிலும் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், பள்ளிக்கூடம், குடிநீர்த் தொட்டி, கல்யாண மண்டபம் உள்ளன. தற்போது, நகராட்சிப் பகுதிகளில் சேகரிக்கும் குப்பைகளை மயானத்தில் கொட்டுவதற்காக திறந்த வெளி மேற்கூரை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இங்கே குப்பை கொட்டுவதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு, தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

இந்த இடம் மயான உபயோகத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என  தானமாக கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் இல்லாத வேறு இடத்தில் குப்பைகளைக் கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர். இப் பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர், சங்கர் உறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: