பகலில் துவங்கியது கேரட் அறுவடை

ஊட்டி,டிச.7:நீலகிரி  மாவட்டத்தில் விளைவிக்கப்படும் கேரட் மேட்டுப்பாளையம் மற்றும் சென்னை  போன்ற பகுதிகளில் உள்ள மொத்த மார்க்கெட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை  செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் கேரட், மேட்டுப்பாளையம்  மண்டிகளில் காலை 10 மணிக்கு ஏலம் விடப்படும் நிலையில், பெரும்பாலான  விவசாயிகள் நள்ளிரவில் தொழிலாளர்களை அழைத்துச் சென்று அறுவடையில்  ஈடுபடுகின்றனர். தொழிலாளர்களை நள்ளிரவில் அழைத்துச் செல்வதால் பல்வேறு  பிரச்னைகள் ஏற்படுகிறது. மேலும், வாகன விபத்துக்களும் அவ்வப்போது  ஏற்படுகிறது. இதனால், அப்பாவி தொழிலாளர்கள் பாதிக்கின்றனர். இது குறித்தான  புகார்களை அடுத்து, கேரட் அறுவடை நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என மாவட்ட  நிர்வாகம் தொடர்ந்து விவசாயிகளை வலியுறுத்தி வருகிறது. இதைத் தொடர்ந்து பெரும்பாலான பகுதிகளில் தற்போது கேரட் அறுவடை நேரத்தை விவசாயிகள்  மாற்றியமைத்துள்ளனர். புதுமந்து, அணிக்கொரை, பாரஸ்கேட், காந்திநகர்,  ஆடாசோலை, தேனாடுகம்பை போன்ற பகுதிகளில் உள்ள விவசாயிகள், காலை 6 மணிக்கு  மேல் கேரட் அறுவடையை துவக்கியுள்ளனர்.

ஊட்டி அருகேயுள்ள  ஆடாசோலையில் நேற்று பகல் நேரங்களில் விவசாயிகள் கேரட் அறுவடையில்  ஈடுபட்டனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘மாவட்ட நிர்வாகத்தின்  வேண்டுகோளை ஏற்று தற்போது பகல் நேரங்களில் கேரட் அறுவடை செய்து வருகிறோம்.  இதனை தொடர்ந்து முறைப்படுத்த வேண்டும். விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்தின்  வேண்டுகோளை ஏற்க வேண்டும். எனினும், ஒரு சிலர் மீறுவதாக குற்றச்சாட்டு  உள்ளது.

அவர்களை கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுத்தால் நள்ளிரவில் கேரட்  அறுவடை செய்வது முற்றிலும் தடை செய்யப்பட வாய்ப்புள்ளது. எனவே, மாவட்ட  நிர்வாகம் தொடர்ந்து இதனை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்க வேண்டும்.  மேலும், இரவு நேரங்களில் லாரிகள், மினி லாரிகளில் தொழிலாளர்களை அழைத்து  சென்றால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலமே  நள்ளிரவில் கேரட் அறுவடை செய்வதை முற்றிலும் தடுக்க முடியும்’, என்றனர்.

Related Stories: