விமான நிலையம் முற்றுகையிட முயற்சி மனிதநேய ஜனநாயக கட்சியினர் கைது

கோவை, டிச.7: பாபர் மசூதி இடிப்பை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சியினர் 550 பேரும், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்திய 2 இந்து அமைப்புகளை சேர்ந்த 50 பேரும் நேற்று கோவை விமான நிலையத்தை முற்றுகையிட முயன்று கைதாகினர். மனித நேய ஜனநாயக கட்சியின் சார்பில் டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பை கண்டித்து தமிழகத்தில் நேற்று 8 இடங்களில் உள்ள விமான நிலையங்களை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று கோவை பீளமேட்டிலுள்ள விமான நிலையத்தை முற்றுகையிட, மனித நேய ஜனநாயக கட்சியினர் அவிநாசி ரோட்டிலுள்ள கொடிசியா நுழைவாயில் அருகே குவிந்தனர். அங்கு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இக்கட்சியின் மாநில துணை பொது செயலாளர் சுல்தான் அமீர் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் ஹாருண்ரஷீது பேசினார்.

பின்னர் அவர்கள் விமான நிலையத்தை முற்றுகையிட கிளம்பிய போது, பீளமேடு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில் 90 பெண்கள் உட்பட 550 பேர் கைதாகினர். அவர்களை ஆர்.ஜி.புதூரிலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் விடுவித்தனர். இந்து அமைப்பினர் 50 பேர் கைது: அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி சக்தி சேனா அமைப்பு சார்பில் அவிநாசி ரோடு, கொடிசியா சந்திப்பில் இருந்து நிறுவன தலைவர் அன்புமாரி, மாவட்ட தலைவர் காளிதாஸ் உட்பட 40 பேர் விமான நிலையத்திற்கு ஊர்வலமாக செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி விவேகானந்தர் மக்கள் இயக்கம் சார்பில் இதன் நிறுவன தலைவர் சிவப்பிரகாசம் தலைமையில், விமான நிலைய முற்றுகைக்கு முயன்ற 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: