நிரப்பப்படாத விஏஓ பணியிடங்களால் பயிர் கணக்கெடுப்பு செய்வதில் காலதாமதம் மானாவாரி விவசாயிகள் அதிருப்தி

கோவில்பட்டி, டிச.6: தூத்துக்குடி மாவட்டத்தில் நிரப்பப்படாத விஏஓ பணியிடங்களால் பயிர் கணக்கெடுப்பு செய்வதில் காலதாமதம் ஆகிறது. இதனால் பயிர் அடங்கல் பெற முடியாமல் மானாவாரி  விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர். தமிழகத்தில் 17,617 வருவாய் கிராமங்கள் உள்ளன. பொதுமக்கள் தங்களுக்கு அரசு  மூலம் கிடைக்க வேண்டிய சலுகைகள், திட்டங்கள், கல்வி ஆகியவற்றிற்கு  வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் வாரிசு, இருப்பிடம், வருமானம்  சான்றிதழ்கள் மற்றும் ஒருநபர், முதல் திருமணம், முதல் பட்டதாரி போன்ற    எண்ணற்ற நலத்திட்டங்களுக்கு வேண்டிய சான்றிதழ்கள் கடந்த காலங்களில் மனு  செய்து அந்தந்த விஏஓ, ஆர்ஐக்கள் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் தாசில்தாரால் வழங்கப்பட்டு வந்தது. தற்போது மின்னணு  இ சேவை மையங்கள் மூலம் மனுக்கள் பெறப்பட்டு உரிய பரிசீலனைக்குப் பிறகு வழங்கப்படுகின்றன. தூத்துக்குடி உள்ளிட்ட பல  மாவட்டங்களில் புரட்டாசி ராபி பருவத்தில் மானாவாரி நிலங்களில் விவசாயிகள்  பயிர் சாகுபடி செய்துள்ளனர். இயற்கை இடர்பாடுகளால் மகசூல்  பாதிக்கப்படும்போது அரசு நிர்ணயித்த தொகையில் இருந்து ஒன்றரை சதவீத  பிரீமியம் தொகையை செலுத்தி பயிர் இழப்பீடு பெற அரசு வழிவகை செய்துள்ளது.

 இதன் அடிப்படையில் விஏஓக்கள் கிராம நிலங்களில்  பயிரிடப்பட்டுள்ள பயிர்களை கணக்கெடுப்பு செய்து கடந்த காலங்களில்  விவசாயிகளுக்கு பயிர் விபர அடங்கலை வழங்கி வந்தனர். 3 ஆண்டுகளுக்கு மேல்  ஒரு வருவாய் கிராமத்தில் பணியாற்றிய விஏஓக்கள் நிர்வாக  வசதிக்காக பணிமாறுதல் செய்யப்படுகின்றனர். பணி மாறுதலுக்கு பிறகு தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, எட்டயபுரம், கயத்தாறு,  விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் தாலுகாக்களில் பெரும்பாலான விஏஓ பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.  விஏஓ பணியிடம் காலியாக உள்ள கிராமங்களில் பயிர்  கணக்கெடுப்பு பணி இதுவரை  நடக்கவில்லை. வரும் ஜனவரி 15ம் தேதிக்குள்  பயிர் காப்பீடு செய்ய வேண்டும். பயிர் கணக்கெடுப்பு செய்ய குறைந்தபட்சம் 10  நாட்களுக்கு மேலாகிறது. அதன்பின்னர் விவசாயிகளுக்கு வழங்கப்படும் அடங்கல்  வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது.  இதனால் மானாவாரி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  எனவே, காலியாக உள்ள வருவாய் கிராமங்களுக்கு உடனடியாக புதிய விஏஓக்களை நியமிக்க வேண்டும். அல்லது அருகேயுள்ள  விஏஓக்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தாமதமின்றி பயிர் கணக்கெடுப்பு நடத்தி அடங்கல் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: