வேட்டியை அவிழ்த்து வீசிவிட்டு நடுரோட்டில் படுத்த குடிமகன்

நித்திரவிளை, டிச.7:  கொல்லங்கோடு அருகே ஊரம்பில் அரசு டாஸ்மாக் கடை, தனியார் மனமகிழ் மன்றம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இதனால் இங்கு தமிழக, கேரள குடிமகன்கள் அதிகம் பேர் வருவர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தனியார் மனமகிழ் மன்றத்தில் இருந்து வெளியே வந்த ஒருவர், தீடீரென ஊரம்பு களியக்காவிளை சாலையின் நடுவில் படுத்துக் கொண்டார். இதனால் அந்த சாலையில் போக்கு வரத்து தடைபட்டது. அந்த பகுதியில் உள்ளவர்கள் அவரை தூக்கி சாலையோரம் படுக்க வைத்தனர். பொதுமக்கள் அவரிடம் சோதனையிட்ட போது, ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் கலந்த மது இருந்தது. அதை அவர்கள் எடுத்தபோது போதை தெளிந்த அந்த வாலிபர் அவர்களிடம் இருந்து மதுவை பறித்தார்.

 பின்னர் எழுந்து சற்று தூரம் சென்று அதை குடித்தார். பின்னர் சாலையோரம் நடந்து வந்து வேட்டியை அவிழ்த்து வீசிவிட்டு ஊரம்பு - கொல்லங்கோடு சாலையில் மீண்டும் படுத்துக்கொண்டார். இதனால் மீண்டும் போக்குவரத்து தடைபட்டது.இது குறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கொல்லங்கோடு போலீசார் வந்து நிர்வாணமாக படுத்திருந்த வாலிபரை தூக்கி பயணிகள் நிழலகத்தில் படுக்க வைத்தனர். பின்னர் 108 ஆம்புலன்சை வரவழைத்து குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்தபகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: