அம்மா உணவகத்தை அகற்ற கடும் எதிர்ப்பு மாநகராட்சி அதிகாரிகளை மக்கள் முற்றுகை

துரைப்பாக்கம், டிச.7: ஈஞ்சம்பாக்கத்தில் இயங்கும் அம்மா உணவகத்தை அகற்ற வந்தபோது, மாநகராட்சி அதிகாரிகளை மக்கள் முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் சுமார் 5 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இப்பகுதியில் அம்மா உணவகம் மற்றும் பொதுக்கழிப்பிடம் கட்டப்பட்டது. இந்நிலையில் நேற்று அதிகாலை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், இந்த அம்மா உணவகத்தை அகற்ற வந்தனர். இதை அறிந்ததும் பெத்தேல் நகர் பாதுகாப்பு பேரவை மற்றும் பொதுமக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து, அம்மா உணவகத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அதிகாரிகளை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதை அறிந்து சோழிங்கநல்லூர் திமுக எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ், வட்ட செயலாளர் சக்திவேல் மற்றும் பலர் திரண்டனர்.

தகவலறிந்து சென்னை மாநகராட்சி சுகாதார துறை துணை ஆணையர் மதுசூதன ரெட்டி மற்றும் நீலாங்கரை போலீஸ் உதவி கமிஷனர் சீனிவாசலு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், ‘‘நாங்கள் இங்குள்ள அரசு மேய்க்கால் புறம்போக்கில் 30 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்களுக்கு அரசு சார்பில் சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளது. பட்டா கோரி மனு கொடுத்துள்ளோம். எங்களை அகற்றவே முதலில் அம்மா உணவத்தை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதை கைவிடாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம்’’ என்றனர். இதையடுத்து, அம்மா உணவகத்தை அகற்ற மாட்டோம் என, அதிகாரிகள் உறுதி கூறியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: