திருவள்ளூர் பிரதான பகுதிகளில் பார்க்கிங் வசதி இல்லாத வணிக வளாகங்கள்

திருவள்ளூர், டிச. 7: திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலையில் உள்ள வணிக வளாகங்கள், கடைகளில் பார்க்கிங் வசதி இல்லாததால், அங்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை சாலையை ஆக்கிரமித்து நிறுத்துகின்றனர். இதனால், போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் அதிகரித்து வருகிறது. திருவள்ளூர் ஜெ.என்.சாலை, சி.வி.நாயுடு சாலைகளில் தினசரி லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலைகளில் 20க்கும் மேற்பட்ட தனியார் வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த சாலைகளில் வணிக வளாகம், வங்கிகளுக்கு கட்டிடங்களை கட்டி வாடகை விட்டுள்ளவர்கள், வாடிக்கையாளர்களின் வாகனங்களை நிறுத்த வசதியாக பார்க்கிங் வசதியை செய்து தருவதில்லை. இதனால், கடைக்காரர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மாநில நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து, தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர்.

இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, ஜெ.என்.சாலை, சி.வி.நாயுடு சாலை ஆகிய பகுதிகளில், நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒரே நேரத்தில் நிறுத்தி செல்வதால், வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகள், லாரி, கார், வேன் மற்றும் இருசக்கர வாகனங்கள் இவ்வழியாக செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இருசக்கர வாகனங்கள் சாலையை ஆக்கிரமித்துள்ளதால் தினமும் ஒரு விபத்தாவது நடந்து விடுகிறது. எனவே விபத்துகள் அதிகரிக்கும் முன், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: