வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு மோப்ப நாய் உதவியுடன் தீவிர கண்காணிப்பு

வேலூர், டிச.7: பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் போலீசார் நேற்று தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.டிசம்பர் மாதம் 6ம் தேதியான நேற்று பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.இந்நிலையில், வேலூர் சரக டிஐஜி வனிதா உத்தரவின்பேரில், வேலூர் மாவட்டத்தில் எஸ்பி பிரவேஷ்குமார் தலைமையில் 1,300 போலீசார் பாதுகாப்பு பணிகளில் நேற்று ஈடுபட்டனர். பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் வரலாற்று புகழ்மிக்க கோட்டை நுழைவு வாயிலில் ஏடிஎஸ்பி தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். கோட்டைக்குள் செல்லும் அனைத்து வாகனங்களையும் போலீசார் சோதனை செய்தபிறகே அனுமதித்தனர்.மேலும், ஜலகண்டஸ்வரர் கோயிலுக்கு வந்த பக்தர்களையும் மோப்பநாய் உதவியுடன் தீவிரமாக சோதனை நடத்தினர். இதுதவிர அரசு அலுவலகங்கள், அனைத்து வழிபாட்டு தலங்கள், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாடகை வாகன நிறுத்துமிடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அத்துடன் முக்கிய ரயில் நிலையங்களான அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் கண்காணித்தனர். ரயில் நிலையங்களில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் சுற்றித்திரியும் நபர்களை பிடித்து விசாரணை நடத்திய பிறகே அவர்களை விடுவித்தனர்.மேலும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் டிஎஸ்பி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையின் மூலம் வாகன போக்குவரத்தும் கண்காணிக்கப்பட்டது.தேபோல், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்களுக்கும் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இரவு நேர ரோந்துப் பணியிலும் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். தங்கும் விடுதிகள், லாட்ஜ்களில் சந்தேகத்துக்குரிய நபர்கள் தங்கியுள்ளனரா? எனவும் சோதனை நடத்தினர்.மேலும், அண்ணாமலையார் கோயிலில் வழக்கத்தைவிட கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. கோயிலுக்கு சென்ற பக்தர்கள் கொண்டுசென்ற பொருட்கள் மற்றும் பைகளை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதித்த பிறகே அனுமதித்தனர்.அதேபோல், சாத்தனூர் அணை, திருவண்ணாமலை ரயில் நிலையம், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

Related Stories: