ஆம்பூர் அருகே கொடிய விஷமுள்ள பாம்புகள் பிடிபட்டன

ஆம்பூர், டிச. 7: ஆம்பூர் அருகே நேற்று கொடிய விஷமுள்ள கொண்டை விரிச்சான் பாம்புகளை வனத்துறையினர் நான்கு மணி நேர தேடுதலுக்கு பின்னர் பிடித்தனர்.ஆம்பூர் அருகே உள்ள மிட்டாளம் ஊராட்சி பைரப்பள்ளியை சேர்ந்தவர் பழனி(48),விவசாயி. வனப்பகுதியையொட்டி உள்ள இவரது நிலத்தில் வாழை, நெல், கால்நடை தீவனப்பயிர்கள் பயிரிட்டு வளர்த்து வருகிறார். நேற்று காலை பழனியின் மனைவி பார்வதி வயலுக்கு நீர் பாய்ச்ச மின் மோட்டார் அறைக்கு சென்றார். அப்போது அங்கு இரண்டு பாம்புகள் ஊர்ந்து செல்வதை பார்த்து கூச்சலிட்டார்.

சத்தம் கேட்ட அப்பகுதியினர் ஓடி சென்று பார்த்த போது அங்கு கொடிய விஷமுள்ள அரிய இரண்டு கொண்டை விரிச்சான் பாம்புகள் ஊர்ந்து செல்வது தெரியவந்தது. பின்னர், இதுகுறித்து ஆம்பூர் வனச்சரக அலுவலர் கவிதாவுக்கு தகவல் கொடுத்தனர்.அதன்படி, வனக்காவலர்கள் லட்சுமணன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கிராம மக்கள் உதவியுடன் 4 மணி நேர தேடுதலுக்கு பின் 2 பாம்புகளை பிடித்தனர். பின்னர், அவற்றை நரியம்பட்டு அருகே உள்ள பல்லலக்குப்பம் காப்புக்காட்டுக்கு கொண்டு சென்று விட்டனர்.

Related Stories: