வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்

செங்கல்பட்டு, டிச.7: செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதிக்கான வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் மற்றும் வக்காளர் பட்டியலில் சரிபார்ப்பு  கூட்டம் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் பொன்னையா கலந்துகொண்டு செங்கல்பட்டு தொகுதி பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இதில், செங்கல்பட்டு சட்ட மன்ற தொகுதி திமுகவினர் வாக்குச்சாவடி முகவர்கள் குறித்த பட்டியலை கலெக்டரிடம் வழங்கினர். கூட்டத்தில் அதிமுக, உள்ளிட்ட கட்சியினரும் கலந்துகொண்டனர்.மேலும், செங்கல்பட்டு நகராட்சி ஆணையர் மாரிசெல்வி, தாசில்தார் பாக்யலட்சுமி மற்று வருவாய்த்துறை, நகராட்சி அதிகாரிகள், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், செங்கல்பட்டு, மறைமலைநகர் நகராட்சி, கூடுவாஞ்சேரி பேரூராட்சியை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களும் பங்கேற்றனர். கூடுவாஞ்சேரி : வருவாய்த்துறை சார்பில் கூடுவாஞ்சேரி மற்றும் வண்டலூர் குறுவட்ட அளவில் வாக்குச்சாவடி நிலை அலுவலர் சிறப்பு முகாம் நடைபெற்றது. வாக்குச்சாவடி நிலை அலுவலர், தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் ஆகியோருக்கு தேர்தல் தொடர்பான சிறப்பு முகாம் கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையோரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் செங்கல்பட்டு கோட்ட கலால் அலுவலர் ஏழுமலை தலைமை தாங்கினார். கூடுவாஞ்சேரி வருவாய் ஆய்வாளர் முருகன், வண்டலூர் வருவாய் ஆய்வாளர் அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 1முதல் 438 வரை உள்ள பாகத்தில் இறப்பு, இரட்டை பதிவு, ஊரைவிட்டு சென்றவர்கள் யார், யார் என்று கண்டறியப்பட்டு அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்காக வருவாய்த்துறையினர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர். இதில் திமுக சார்பில் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளர் எம்.கே.தண்டபாணி தலைமையில்,  நந்திவரம்-கூடுவாஞ்சேரி திமுக பேரூர் செயலாளர் ஜி.கே.லோகநாதன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.கே.டி.கார்த்திக் உட்பட100க்கும் மேற்பட்டோர் போலி வாக்காளர்கள் குறித்து அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தனர். திருக்கழுக்குன்றம்:வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் (2019) தொடர்பாக வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான சிறப்புக்கூட்டம் காஞ்சிபுரம் கலெக்டர்  பொன்னையா தலைமையில் நேற்று காலை திருக்கழுக்குன்றத்தில் நடந்தது.

செங்கல்பட்டு ஆர்டிஓ முத்துவடிவேல், திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இடம் பெயர்ந்தோர் மற்றும் இறந்துவிட்ட நபர்கள், இரட்டைப்பதிவு பெயர்கள் ஆகிய விவரங்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கக்கோரி வாக்குச்சாவடி முகவர்களிடம் மனுக்கள் பெறப்பட்டு,   அவற்றை ஆய்வு செய்து அறிக்கை வழங்க வாக்குச்சாவடி அலுவலர்களிடம் படிவங்கள் வழங்கப்பட்டன.   அதேபோல் நேற்று மாலை சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் சக்திவேல் தலைமையில் இக்கூட்டம் நடந்தது. திருக்கழுக்குன்றம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சரவணன் முன்னிலை வகித்தார். அப்போது அதே போன்று படிவங்கள் வழங்கப்பட்டது. இக் கூட்டங்களில் முன்னாள் திமுக எம்எல்ஏ வீ.தமிழ்மணி, மாவட்ட துணை செயலாளர் விஸ்வநாதன், திருக்கழுக்குன்றம் பேரூர் செயலாளர் யுவராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: