இடம் மாற்றுவதற்கு எதிர்ப்பு ரேஷன் கடையை ஆவேசமாக முற்றுகையிட்ட பொதுமக்கள்

அருப்புக்கோட்டை, டிச.6: அருப்புக்கோட்டையில் ரேஷன் கடையை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அருப்புக்கோட்டை புளியம்பட்டி கூட்டுறவு பண்டகசாலை கட்டுப்பாட்டில் வெள்ளக்கோட்டை, மேட்டாங்கரை, கல்பாலம் தெருவில் ரேஷன் கடை கடந்த 10 ஆண்டு காலமாக ஒரு அங்கன்வாடி கட்டிடத்தில் இயங்கி வருகிறது.  இந்த ரேஷன் கடையில் பாரதிதாசன் தெரு, வாலிபர் சங்க குறுக்குத்தெரு, மீனாட்சிபுரம் புதுத்தெரு, சுப்பிரமணியபுரம் தெரு ஆகிய பகுதிகளை சேர்ந்த 700க்கு மேற்பட்ட கார்டுதாரர்கள் பொருட்கள் வாங்கி வருகின்றனர்.   இந்த ரேஷன் கடை இயங்கி வரும் கட்டிடம் அங்கன்வாடி மையத்திற்காக கட்டப்பட்டது.

இந்த கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று திடீரென மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.   இதனால் ரேஷன் கடையை வேறு இடத்திற்கு மாற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.  கடையை மாற்றுவதால் வயதானவர்கள்  எளிதாக சென்று பொருட்கள் வாங்க முடியாது;

இதே இடத்தில் தான் ரேஷன் கடை செயல்பட வேண்டும்.  இல்லையென்றால் கார்டுகளை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைப்போம் என நேற்று அப்பகுதி மக்கள் ரேஷன் கடை முன்பு முற்றுகையிட்டனர்.  இதுகுறித்து தகவல் அறிந்த வட்ட வழங்கல் பிரிவு அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ரேஷன் கடையை மாற்றக்கூடாது.  கடந்த 10 ஆண்டுகளாக இங்குதான் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. எனவே இந்த கட்டிடத்தில்தான் ரேஷன் கடையை இயக்க உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

Related Stories: