பட்டாசு தொழிலாளர் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

விருதுநகர், டிச.6:  பட்டாசு ஆலைகளுக்கு விதிக்கப்பட்டு கடுமையான விதிமுறைகளை நீக்க வேண்டும்; மீனவர்களுக்கு மீன்பிடி தடை காலத்தில் நிவாரணம் வழங்குவது போல பட்டாசு தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி பட்டாசு ஊழியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். தொழிலாளர்கள் கூறுகையில், ‘‘சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகளில் 1500க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. இங்கு 8 லட்சத்திற்கும் மேற்ப்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் பட்டாசு ஆலைகளை தொடர்ந்து நடத்த முடியாமல் கடந்த ஒரு மாதமாக உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால்  தீபாவளி முடிந்து ஒரு மாதமாகியும் பட்டாசு தொழிலாளர்களின்  வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பட்டாசு ஆலைகள் மீது உள்ள கடுமையான விதிகளை நீக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். எட்டு லட்சம் தொழிலாளர் குடும்பங்களை பாதுகாக்க சட்டமன்றத்தில் தனி தீர்மானம் இயற்ற வேண்டும். மீனவர்களுக்கு மீன்பிடி தடை காலத்தில் நிவாரணம் வழங்குவது போல பட்டாசு தொழிலாளர்களுக்கும் தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும்’’ என தெரிவித்தனர்.

Related Stories: