திருச்சுழியில் இருந்து ரெட்டியபட்டிக்கு பஸ் இயக்க வேண்டும்

திருச்சுழி, டிச.6:  திருச்சுழியில் இருந்து ரெட்டியபட்டிக்கு தமிழ்பாடி, கல்லுமடம் வழியாக டவுன் பஸ் இயக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சுழியிலிருந்து 14 கி.மீ., தொலைவில் ரெட்டியபட்டி உள்ளது.  இந்த வழித்தடத்தில் தமிழ்பாடி, ராமசாமிப்பட்டி, ஆலடிப்பட்டி, கல்யாணசுந்தரபுரம், கல்லுமடம், கத்தாளம்பட்டி உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.  இந்த கிராமங்களில் பெரும்பாலும் விவசாயிகளும்,  விவசாய கூலித் தொழிலாளர்களும் அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாய வேலைக்காக தினமும் திருச்சுழி, ரெட்டியபட்டிக்கு சென்று வருகின்றனர்.  

மேலும் இந்த கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் திருச்சுழி, ரெட்டியபட்டியில் உள்ள மேல்நிலை பள்ளிகளுக்கு சென்று படித்து வருகின்றனர். இந்த வழித்தடத்தில் டவுன் பஸ்கள்  இல்லாததால் இவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.  மேலும் திருச்சுழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ரெட்டியபட்டியில் உள்ளது.  ற்போது திருச்சுழியில் இருந்து ரெட்டியபட்டிக்கு ராமசாமி நகர் வழியாக டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன.  இந்த பஸ்களில் சென்றால் 30 கி.மீ., சுற்றி செல்ல வேண்டும்.  மேலும் நேர் வழித்தடத்தில் உள்ள தமிழ்பாடி, கல்லுமடம் உள்ளிட்ட கிராமங்களுக்கு இந்த பஸ்கள் செல்வதில்லை.  ராமசாமி நகர் வழியாக சென்றால் பயண நேரமும் அதிகமாகிறது.  

டிக்கெட் கட்டணமும் அதிகம்.  இதனால் தமிழ்பாடி, கல்லுமடம் வழியாக திருச்சுழி-ரெட்டியபட்டி வழித்தடத்தில் டவுண் பஸ்கள் இயக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.    இது குறித்து கல்யாணசுந்தரபுரத்தை சேர்ந்த மக்கள் கூறுகையில், ‘‘இந்த வழித்தடத்தில் டவுன் பஸ்கள் இல்லாததால் அவசர சிகிச்சைக்காக நோயாளிகளை திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியவில்லை.  நோயாளிகளை டூவீலரில் அமர வைத்து கூட்டி செல்ல வேண்டும்.  விவசாயிகள் விளை பொருட்களை தலைச்சுமையாக தூக்கிக் கொண்டு பல கி.மீ., நடந்து செல்கின்றனர்.  எனவே திருச்சுழியில் இருந்து கல்லுமடம் வழியாக ரெட்டியபட்டிக்கு டவுன் பஸ் இயக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: