சின்னமனூர் சுற்றுப்புற கிராம பகுதிகளில் இரண்டாம் போக நெல் நடவு பணிகள் துவக்கம்

போடி, டிச. 6: சின்னமனூர் சுற்றுப்புறத்திலுள்ள கிராம பகுதிகளில் இரண்டாம் போக நெல் நடவுப் பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.முல்லைபெரியாறு பாசனத்தின் மூலம் சின்னமனூர் நகர் மற்றும் சுற்றியுள்ள 4 ஆயிரம் ஏக்கர் வயல்வெளிகளில் வருடத்தில் இருபோகம் நெல்சாகுபடி விவசாயம் நடந்து வருகிறது. வழக்கம்போல் கம்பம் பள்ளத்தாக்கிலுள்ள 14 ஆயிரத்து 714 ஏக்கர் வயல்வெளிகளுக்கு லோயர்கேம்பிலிருந்து துவங்கி கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், மார்க்கையன்கோட்டை, குச்சனூர், சீலையம்பட்டி, கோட்டூர், வீரபாண்டி, பழனிசெட்டிபட்டி வரையில் இருபோகம் விளைவிக்கப்பட்டு வருகிறது.

வழக்கம் போல் ஜூன் முதல் தேதியில் முல்லைபெரியாறு அணையில் 120 அடிக்கு மேல் தண்ணீர் இருந்தால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். கடந்த சில வருடங்களாக பருவமழைகள் பொய்த்து போனதால் சரிவர மழை பெய்யவில்லை. இதனால் இருபோகங்களில் ஒரு போகம் மட்டுமே விவசாயம் நடக்கும். சில நேரங்களில் பாதியிலேயே சாவியாக போய் பாதியில் நின்றுவிடும். இதனால் விவசாயிகள் கடுமையான நஷ்டத்தினை சந்தித்தனர். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக ஓரளவு மழை பெய்துள்ளதால் பழைய நிலையினை மறுபடியும் எட்டியுள்ளது.

நடப்பாண்டில் முதல் போகத்திற்கு ஜூன் மாதம் தாமதமாக 25ம் தேதி தண்ணீர் திறந்ததைதொடர்ந்து விவசாயிகள் 120 நாட்கள் நெல் சாகுபடி செய்து அறுவடையினை நிறைவு செய்துள்ளனர். ஆனால் அறுவடை நேரத்தில் மழை பெய்ததால் புகையான் நோய் தாக்குதலால் நெல் கதிர்கள் கருகி 70 சதம் அளவில் அறுவடையாக வந்து சேர்ந்தது. மறுபடியும் இரண்டாம் போகத்திற்காக கடந்த 25 நாட்களுக்கு முன்பாக நாற்றாங்கால் பாவி வளர்த்து தயார் நிலையில் நாற்றுகள் வைத்துள்ளனர். அதனால் சில நாட்களாக மார்க்கையன்கோட்டை, குச்சனூர் பகுதிகளில் சேற்றுழவு பணிகள் தீவிரமாக செய்தனர். நேற்று நெல் நடவு பணிகள் துவங்கி வேகமாக நடந்து வருகிறது. அதேபோல் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் 2ம் போத்திற்கான நடவு பணிகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: