சடையால்பட்டியில் 2ம் போக நெல்நடவு

தேனி அருகே சடையால்பட்டி பகுதியில் 2ம் போக நெல் நடவு பணி தீவிரமாக நடந்து வருகிறது. முல்லைப்பெரியாற்று நீரை பாசன நீராதாரமாக கொண்டு வீரபாண்டி, உப்புக்கோட்டை, சடையால்பட்டி, போடேந்திரபுரம், பழனிசெட்டிபட்டி பகுதி விவசாய நிலங்கள் உள்ளன. முல்லைபெரியாற்றில் கடந்த ஜூலை மாதம் திறந்துவிடப்பட்ட நீரைக்கொண்டு முதல்போக நெல்நடவு செய்யப்பட்டு மகசூல் எடுக்கப்பட்டது. இதனையடுத்து, தற்போது இரண்டாம் போக நெல்நடவுக்கான பணிகள் துவங்கியுள்ளது.

இரண்டாம் போக நெல்நடவுக்காக ஏற்கனவே, வயல்களில் நெல் பாவப்பட்டது. இதனையடுத்து, வயலில் டிராக்டர் மற்றும் மாட்டு ஏர் மூலம் தொழி அடித்து நிலம் பக்குவப்படுத்தப்பட்டது. இந்த நிலத்தில் தற்போது நெல் நாற்றுகள் நடவு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

நெல்நடவுப் பணிகள் நடப்பதால் வயலில் உள்ள புழுக்களை தின்பதற்காக கொக்குகள் கூட்டம் அதிக அளவில் இப்பகுதி விவசாய நிலங்களுக்கு வந்துள்ளது. இதனால் வயல்காட்டில் எங்குபார்த்தாலும் கொக்கு, நாரைகளின் கூட்டம் இப்பகுதி வழியாக செல்வோரை கவர்ந்து வருகிறது.

Related Stories: