தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தாராள விற்பனை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கூடலூர், டிச. 6: கூடலூர் நகராட்சி பகுதிகளில் ஒருசில கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை அமோகமாக விற்பனை நடைபெறுகிறது. இளைஞர்களை சீரழிக்கும் போதைப் புகையிலையை விற்பனை செய்பவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   புகையிலை வெளியில் தெரியாத போதை என்பதால், வயதானவர்கள் மட்டுமின்றி பள்ளி, கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் இப்போதைக்கு அடிமையாகி வருகின்றனர். புற்றுநோய்வர புகையிலையும் ஒரு காரணம் என தெரிந்திருந்தும், இதன் விற்பனை கடந்த சில ஆண்டுகளில் பன்மடங்காக அதிகரித்துள்ளது.

“18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு பாக்கு மற்றும் புகையிலை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என மத்திய அரசு சட்டம் இயற்றியது. அண்டை மாநிலமான கேரளத்தில், போதைப்பாக்கும், புகையிலையும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் கூடலூர் மெயின் பஜார், மெயின்ரோடுகளில் உள்ள ஒருசில கடைகளில் அதிகாரிகளின் ஆசியுடன் புகையிலை தாராளமாக விற்பனை நடைபெறுகிறது.

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்துடைப்புக்காக நடத்தும் சோதனையை விடுத்து, முறையாக சோதனை நடத்த வேண்டும். மேலும் பள்ளி, கல்லூரி அருகே உள்ள கடைகளை அடிக்கடி சோதனை செய்வதோடு, பள்ளி மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் புகையிலை விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீது, நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பாக்ஸ் நியூஸ் கேரளத்தில் போதைப்பாக்கும், புகையிலையும் தடை செய்யப்பட்டுள்ளதால், தமிழகப் பகுதியான கூடலூர், கம்பத்தில் இருந்து தினந்தோறும், இவை கடத்தி செல்லப்படுகிறது. சிறு, சிறு பார்சல்களாக பஸ்களிலும், ஜீப்புகளிலும் கடத்திச்செல்கின்றனர். மேலும் தமிழகப்பகுதியிலிருந்து ஏலத்தோட்ட வேலைக்காக செல்லும் கூலித்தொழிலாளர்கள் சிலர் போதைப்பாக்கு, புகையிலையை வாங்கிச்சென்று கேரளாவிலுள்ள சிறு கடைகளில் விற்பனை செய்கின்றனர். கம்பம், கூடலூர் பகுதியில் மட்டும் கடைகளில், நாளொன்றுக்கு சுமார் 4 லட்சம் ரூபாய் வரை போதைப்பாக்கும், புகையிலையும் விற்பனையாவதாக தெரியவந்துள்ளது.

Related Stories: