ராமேஸ்வரம்-ஏர்வாடிக்கு அரசு பஸ் இயக்கப்படுமா?

பெரியகுளம், டிச.6:  பெரியகுளத்தில் இருந்து புனித ஸ்தலங்களுக்கு செல்லும்  ராமேஸ்வரம், ஏர்வாடி பஸ்கள் மீண்டும் இயக்கப்பட வேண்டும் என்று  பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். தேனி மாவட்டத்தில் இருந்து  தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கும், ஆன்மீக ஸ்தலங்களுக்கும் அரசு பஸ்கள்  இயக்கப்பட்டு வருகிறது.  அதேசமயம் பெரியகுளத்தில் இருந்து ராமநாதபுரம்  மாவட்டத்தில் உள்ள புனித ஸ்தலமான ராமேஸ்வரம் மற்றும் தூத்துக்குடி  மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் ஆகிய நகரங்களுக்கு பெரியகுளம் அரசு  போக்குவரத்துக் கழகம் மூலம் பஸ்கள் இயக்கப்பட்டன.

   பெரியகுளத்தில்  இருந்து காலை 9.30 மணிக்கு ராமேஸ்வரம் செல்லும் பஸ் அங்கிருந்து மாலை 4.15  மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு பெரியகுளம் வந்தடையும். காலை 11 மணிக்கு ஏர்வாடிக்கு புறப்படும் பஸ் மீண்டும் அங்கு மாலை 5 மணிக்கு பெரியகுளம் வந்தடையும்.

காலை 8  மணிக்கு திருச்செந்தூர் புறப்படும் பஸ் அங்கிருந்து மாலை 4 மணிக்கு  புறப்பட்டு நள்ளிரவு பெரியகுளம் வந்தடையும்.   இந்த வழித்தடங்களில்  இயக்கப்பட்ட மூன்று பஸ்களிலும் அதிக அளவில் பயணிகள் சென்று வந்தனர். மேலும்  போதிய வருவாயும் இருந்தது. இந்நிலையில் திடீரென கடந்த சில மாதங்களுக்கு  முன்பு ராமேஸ்வரம் மற்றும் ஏர்வாடிக்கு சென்று வந்த பஸ் நிறுத்தப்பட்டது. இதனால் நீண்ட தூரம் செல்லும் பயணிகளும், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பஸ்கள் மாறி மாறி செல்ல அவதிப்படுகின்றனர். எனவே, பெரியகுளத்தில் இருந்து ஏர்வாடி, ராமேஸ்வரத்திற்கு நிறுத்தப்பட்ட பஸ்களை  மீண்டும்  இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Related Stories: