இன்று பாபர் மசூதி இடிப்பு தினம் ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பு விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

மதுரை, டிச. 6: பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று அனுசரிப்பைதையொட்டி, மதுரையில் விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி மதுரை மாவட்டத்தில் கோயில்கள், சர்ச்சுகள் மற்றும் பள்ளிவாசல்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மதுரையில் விமான நிலையம், ரயில் நிலையங்களில் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. ரயில்வே டி.எஸ்.பி. மன்னர் மன்னன் தலைமையில், 2 இன்ஸ்பெக்டர்கள் 5 சப்இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட ரயில்வே மற்றும் பாதுகாப்புபடை போலீசார், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாருடன் இணைந்து பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று காலை முதல் மதுரை, திருப்பரங்குன்றம், சோழவந்தான் மற்றும் திருமங்கலம் ரயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் பாதைகள், பிளாட்பாரங்கள், பயணிகள் காத்திருக்கும் இடங்கள் மற்றும் நுழைவு வாயில்களில் போலீசார் தீவிரமாக கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதுதவிர மதுரையிலிருந்து செல்லும் ரயில்கள், மதுரை வழியாக செல்லும் அனைத்து ரயில்களிலும், மெட்டல் டிடெக்டர் கருவிகளுடன் போலீசார் சோதனை செய்தனர். பயணிகளின் உடமைகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே ரயில்களில் ஏற்றுவதற்கு அனுமதிக்கப்படுகிறது.

அவனியாபுரம்: பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனையொட்டி மத்திய தொழில் பாதுகாப்பு படை, அதிவிரைவு படை மற்றும் போலீசார் இணைந்து விமான நிலையத்தின் உள்வளாகம், வெளிவளாகம் மற்றும் சுற்றுப்புறத்தில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: