பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி ரயில்வே ஸ்டேஷன்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு சேலம் சரகத்தில் 3ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

சேலம், டிச.6: பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, இன்று (6ம்தேதி) நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் பலப்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு மாநிலத்திலும் ரயில்வே ஸ்டேஷன்கள், முக்கிய பேருந்து நிலையங்கள், மக்கள் கூடும் இடங்கள், முக்கிய மார்க்கெட் பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட  ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ளூர் போலீசாருடன் இணைந்து ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் இரவு முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

சேலம் ரயில்வே கோட்ட பாதுகாப்பு படை கமிஷனர் சீனிவாசராவ், உதவி கமிஷனர் சிவதாஸ் உத்தரவின் பேரில், சேலம் ரயில்வே ஸ்டேஷனில் ரயில்வே பாதுகாப்பு படை எஸ்ஐக்கள் பெருமாள், முத்துசாமி மற்றும் பாதுகாப்பு படையினர், ரயில்வே போலீசார்  பயணிகளின் உடமைகளை மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், கேரளா செல்லும் ரயில்களிலும், வட மாநிலத்தில் இருந்து வருவோரிடமும் சோதனை நடத்துகின்றனர்.  வெளியூருக்கு அனுப்பும் பார்சல், வந்து இறங்கும் பார்சல்களும் ஆய்வுக்கு உட்படுத்தினர். தொடர்ந்து, மோப்பநாய் கொண்டு அனைத்து ரயில்களிலும் சோதனை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு படையினருடன் இணைந்து, தமிழக ரயில் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சோதனை இன்றும், நாளையும் நீடிக்கும் என பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.

இதேபோல், சேலம் சரகத்தில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அந்தந்த மாவட்ட எஸ்.பி.,க்கள் தலைமையில் இரவு ரோந்து மற்றும் முக்கிய இடங்களில் கண்காணிப்பை மேற்கொண்டுள்ளனர். சேலம் சரகம் முழுவதும் 3 ஆயிரம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

Related Stories: