இடைப்பாடி பகுதியில் பொங்கல் பானை தயாரிப்பு பணி மும்முரம்

இடைப்பாடி, டிச.6: பொங்கல் பண்டிகையையொட்டி, இடைப்பாடி பகுதியில் பானை தயாரிப்பு பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் இடைப்பாடி குலாலர் தெரு, மேல் சித்தூர், இருப்பாளி, குருக்கப்பட்டி, கோனேரிப்பட்டி, பூலாம்பட்டி, கச்சுப்பள்ளி, செட்டிப்பட்டி, தேவூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மண்பாண்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், பொங்கல் பண்டிகையை எதிர்நோக்கி பானை தயாரிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பொங்கல் வைக்க வசதியாக பெரிய பனை, சிறிய பானை, குழம்பு வைக்கும் சட்டிகளை விதம் விதமாக உற்பத்தி செய்து விற்பனைக்கு அனுப்பி வைக்கும் பணியை முடுக்கி விட்டுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், களி மண் மற்றும் மணல் கலந்து சட்டி, பானை தயாரித்து வருகிறோம். இதற்காக சுற்றுப்புற பகுதியில் உள்ள ஏரிகளில் இருந்து டிராக்டர் களி மண் லோடு ₹2000, மணல் ₹1300 முதல் ₹1500 வரையிலும் விலை கொடுத்து வாங்கி வந்து சட்டி, பானை தயாரிக்க பயன்படுத்தி வருகிறோம். சிறிய சட்டி ஒன்று ₹25 முதல் ₹30 வரையிலும், சிறிய பானை ₹50க்கும், நடுத்தர பானை ₹100க்கும், மிகப்பெரிய பானை ₹200 வரையிலும் விற்பனை செய்து வருகிறோம். 2 பேர் காலை முதல் மாலை வரையிலும் வேலை செய்தால் அனைத்து செலவுகளும் போக, ₹500 கிடைப்பதே பெரும்பாடாக உள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி, சேலம் மற்றும் நாமக்கல், ஈரோடு, திருச்சி, தர்மபுரி, கோவை ஆகிய மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் நேரில் வந்து மொத்தமாக ஆர்டர் கொடுத்து வாங்கிச் செல்கின்றனர். இதனால், இரவு-பகலாக பானை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோம். தமிழக அரசு மண்பாண்ட தொழிலாளர்கள் அனைவருக்கும் மணல், களிமண் இலவசமாக வழங்க வேண்டும். இலவச மின்சாரம் வழங்கினால் மண்பாண்ட தொழில் விருத்தியடையும். அதனை நம்பியுள்ள தொழிலாளர்களும் பயனடைவர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: