நாமக்கல்லில் திருடப்பட்ட 2 லாரி மீட்பு; 7 பேர் கும்பல் கைது

நாமக்கல், டிச. 6: நாமக்கல்லில் திருடப்பட்ட 2 லாரி மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 7 பேர் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் அருகேயுள்ள வில்லிபாளையத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி, நாமக்கல்லை சேர்ந்தவர் முத்துசாமி. இவர்கள் இருவரும் கடந்த ஆகஸ்ட் மாதம் நல்லிபாளையம் போலீசில் புகார் அளித்தனர். அதில் வள்ளிபுரம் பைபாஸ் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த, தங்களது லாரியை யாரோ திருடிச்சென்றுவிட்டனர் என கூறியிருந்தனர். இதன் அடிப்படையில் நல்லிபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் திருட்டுபோன 2 லாரிகளை ஓசூர், நாமக்கல் பகுதியில் போலீசார் மீட்டனர். விசாரணை நடத்திய ேபாலீசார், லாரியை திருடி விற்பனை செய்த 7 பேரை நேற்று கைது செய்துள்ளனர்.

அவர்கள் பெயர் விபரம்: சேலத்தை சேர்ந்த செல்வக்குமார்(48), ஊந்தங்கரை சேர்ந்த சாமிதுரை(32), போச்சம்பள்ளி விஸ்வநாதன்(25). பூலாம்பட்டி சம்பத்குமார்(38), எடப்பாடி வெள்ளியங்கிரி(37), மேட்டூர் குணசேகரன்(36) மற்றும் கார்த்திக்(35). இது தொடர்பாக போலீசாரிடம் கார்த்திக் அளித்த வாக்குமூலம் வருமாறு:கடந்த 2 ஆண்டாக லாரி வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறேன். அப்போது மேட்டூரை சேர்ந்த லாரி புரோக்கர் குணசேகரனுடன் பழக்கம் ஏற்பட்டது. எங்கள் இருவருக்கும் எடப்பாடியை சேர்ந்த திருட்டு லாரியை வாங்கி இன்ஜின் நம்பர், சேசிஸ் நம்பரை மாற்றி விற்பனை செய்யும் மாணிக்கத்தின் அறிமுகம் கிடைத்தது.

கடந்த ஆகஸ்ட் மாதம் போச்சம்பள்ளி விஸ்வநாதன், பூலாம்பட்டி சம்பத்குமார், எடப்பாடி வெள்ளியங்கிரி ஆகியோர் நாமக்கல்லில் ஒரு லாரியை திருடி வந்து, மாணிக்கத்திடம் கொடுத்தனர். பின்னர் அந்த லாரியின் பதிவு எண்ணை மாற்றி மாணிக்கத்திடம் இருந்து ₹1 லட்சத்துக்கு வாங்கினோம்.

அந்த லாரியை விழுப்புரத்தை சேர்ந்த சுரேஷ் என்பவருக்க ₹2.80 லட்சத்துக்கு விற்பனை செய்தோம். சுரேஷ் அதை தேனி மாவட்டத்தை சேர்ந்த ஹக்கீம் என்பவருக்க ₹5.40 லட்சத்துக்கு விற்றுவிட்டார். அதன் பிறகு அவர், சிவகங்கையை சேர்ந்த கண்ணனுக்கு ₹7.75 லட்சத்துக்கு லாரியை விற்பனை செய்துள்ளார். இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட 7 பேரையும் நல்லிபாளையம் போலீசார் நேற்று நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

திருடிய லாரி சிக்கியது எப்படி? திருட்டு லாரியை வாங்கிய சிவகங்கை கண்ணன், அந்த லாரியை பழுது பார்க்க நாமக்கல் காதப்பள்ளியில் உள்ள ஒரு லாரி பட்டறையில் கடந்த வாரம் நிறுத்தியிருந்தார். அப்போது, லாரியின் பதிவு எண், சேசிஸ் எண் மாற்றப்பட்டுள்ளதை அறிந்த பட்டறை ஊழியர்கள், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் நாமக்கல்லில் திருடப்பட்ட லாரி என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர். இதே பாணியில் ஓசூரில் இருந்து மற்றொரு லாரியை போலீசார் மீட்டனர்.

Related Stories: