கோமாரி நோய் பாதிப்பு எதிரொலி கால்நடை சந்தைகளுக்கு ஒரு மாதம் தடை

கிருஷ்ணகிரி, டிச.6: கிருஷ்ணகிரி  மாவட்டத்தில் கால்நடை சந்தைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் தகவல் தெரியாமல்  சந்தைக்கு வந்த வியாபாரிகளும், விவசாயிகளும் ஏமாற்றத்துடன் சென்றனர்.  கிருஷ்ணகிரி  மாவட்டத்தில் பனிப்பொழிவு அதிகம் இருப்பதாலும், கால்நடைகளுக்கு கோமாரி  நோய் தொற்று ஏற்படாமல் இருக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை போச்சம்பள்ளி, ஒரப்பம், குந்தாரப்பள்ளி,  பாகலூர், கெலமங்கலம் ஆகிய இடங்களில் நடைபெறும் கால்நடை சந்தைகளுக்கு மாவட்ட  நிர்வாகம் டிசம்பர் மாதம் முழுவதும் தடை விதித்துள்ளது. இது பற்றிய அறிவிப்பு அனைத்து தரப்பினருக்கும் நாளிதழ் வாயிலாக தெரிவிக்கப்பட்டது.

 பர்கூர் அருகே ஒரப்பம் கிராமத்தில் வாரந்தோறும் புதன்கிழமையன்று கால்நடை சந்தை  நடைபெறுவது வழக்கம். இந்த சந்தையில் உள்ளூர் மட்டுமின்றி அருகில் உள்ள  பாலிநாயனப்பள்ளி, வரட்டனப்பள்ளி, எலத்தகிரி, மாதனகுப்பம், காத்தான்பள்ளம்,  கந்திகுப்பம், பாலேப்பள்ளி, சின்னமட்டாரப்பள்ளி, தேசுப்பள்ளி,  வள்ளுவர்புரம், ஓதிகுப்பம், குருவிநாயனப்பள்ளி, பசவண்ணகோவில்,  சிந்தகம்பள்ளி, கொட்டிலேட்டி, காரகுப்பம், பர்கூர், பிஆர்ஜி மாதேப்பள்ளி,  அச்சமங்கலம், கொல்லப்பள்ளி, அஞ்சூர், ஜெகதேவி, மருதேப்பள்ளி உள்ளிட்ட  சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும், அண்டைய மாநிலமான ஆந்திராவில்  இருந்தும் ஏராளமான விவசாயிகள் தங்கள் ஆடு, மாடுகளை இந்த சந்தைக்கு அழைத்து  வந்து விற்பனை செய்வதும், தங்களுக்கு தேவையான கால்நடைகளை வாங்கி  செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

அத்துடன் வியாபாரிகளும் அதிக அளவில்  இந்த சந்தைக்கு வந்து தங்களுக்கு தேவையான ஆடு, மாடுகளை மொத்தமாக வாங்கி  செல்வதும் வழக்கம்.  இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் டிசம்பர் மாதம்  முழுவதும் கால்நடை சந்தை இல்லை என்ற அறிவிப்பை வெளியிட்டது தெரியாமல், விவசாயிகளும், வியாபாரிகளும்  வழக்கம் போல் நேற்று காலை ஒரப்பம் வந்தனர்.  அங்கு வந்த பின்னர் தான் கால்நடை சந்தை இல்லை என்ற விவரம் தெரிந்துள்ளது.  இது குறித்து மாவட்ட நிர்வாகமும் அங்கு பேனர் வைத்துள்ளது.

இதனால்  செய்வதறியாமல் விவசாயிகளும், வியாபாரிகளும் சாலையின் ஓரம் தங்கள்  கால்நடைகளை நிறுத்தி வைத்து கொண்டு திகைத்தனர். பின்னர்,  ஒவ்வொருவராக தங்கள் கால்நடைகளை மீண்டும் அழைத்து சென்றனர். இதனால் ஒரப்பம்  கால்நடை சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. இந்த சந்தையை நம்பி, சந்தையில் பிற  கடைகளை வைத்திருந்தவர்களும் வியாபாரம் ஏதும் நடைபெறாததால் வழக்கத்தைவிட  முன்னதாக தங்கள் கடைகளை காலி செய்து சென்று விட்டனர். கால்நடைகளை ஏற்றி வந்த டெம்போக்களுக்கு வாடகை கொடுக்கும் கட்டாய சூழல் எழுந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனர்.

Related Stories: