3 மாதமாக கிடப்பில் உள்ள அகலப்பணி போச்சம்பள்ளி-கல்லாவி சாலையால் விபத்து அபாயம்

போச்சம்பள்ளி, டிச.6:  கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் இருந்து கல்லாவி செல்லும் சாலை முக்கியமானதாக கருதப்படுகிறது. சார்பதிவாளர் அலுவலகம், அரசு மருத்துவமனை, அரசுப்பள்ளிகள், கோர்ட், தபால் அலுவலகம் மற்றும் தனியார் பள்ளிகள், தொழிற்சாலைகள் என பல்வேறு நிறுவனங்கள் அமைந்துள்ளது.  இச்சாலை எப்போதும் மக்கள் கூட்டம், வாகனங்கள் சென்று வரும் சாலையாகும். மிகவும் அபாய வளைவுகள் கொண்ட பகுதியாகவும் உள்ளது. கல்லாவி சாலையை விரிவுபடுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து, 3 மாதத்திற்கு முன் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் இருந்து தனியார் பள்ளி  வழியாக சுமார் 7 கிலோமீட்டர் தூரம் உள்ள ஓலைப்பட்டி சந்திப்பு சாலை வரை விரிவாக்க பணி மேற்ெகாள்ளப்படுகிறது. இப்பணி நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

 3.75 மீட்டர் உள்ள தார் சாலையை 2 பக்கமும் அகலப்படுத்தி 7 மீட்டராக அகலப்படுத்தி புதிய தார்சாலை அமைத்துக் கொடுக்க ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. போச்சம்பள்ளியிலிருந்து ஓலைப்பட்டி சந்திப்பு சாலை வரை 7 கிமீ தூரத்திற்கு இடது பக்கம் சுமார் 2 அடிக்கு பள்ளம் தோண்டப்பட்டு 3 மாதங்களாக பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இவ்வழியாக ஒரு வாகனம் மட்டுமே செல்லக்கூடிய சாலையாக இருந்தது. தற்போது சாலையை விரிவுப்படுத்துவதாக கூறி 3 மாதத்திற்கு மேல் ஆகியும் சாலையை சரி செய்யாமல் உள்ளதால் அவ்வழியாக வரும் வாகனங்கள்  குழந்தைகளை ஏற்றி வரும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் ஓட்டுனர்கள் மற்றும் மக்கள் பீதியில் உள்ளனர். இதனால் சிறு சிறு விபத்துகள் ஏற்பட்டு வருவது அதிகாரிகளுக்கு தெரிந்தும் கண்டு கொள்ளாமல் மெத்தன போக்கில் உள்ளது வேதனையாக உள்ளது.  எனவே உடனடியாக கல்லாவி சாலை விரிவாக்க பணியை துரிதமாக செயல்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: